புதுடெல்லி: தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1,100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டு 150 நாட்கள் ஆகிவிட்டன ஆனால், அங்கு செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை என விமர்சித்துள்ளார். “மணிப்பூர் சட்டமன்றத் தொடர் 15 நிமிடங்களில் முடிந்துவிட்டது. மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களில் ஒரு சமூகமான குகி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு கருதி கூட்டத் தொடரில் பங்கேற்க மறுத்துவிட்டனர். நடந்து கொண்டிருந்த வன்முறையைத் தவிர மற்ற அனைத்தையும் மணிப்பூர் பேரவை நினைவு கூர்ந்தது.
ஒரே நாளில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும், மத்திய அரசைப் பொறுத்தவரை, மணிப்பூரில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதல்வர் பலத்த பாதுகாப்புடன் உல்லாசமாக இருக்கிறார். மணிப்பூரில் வன்முறை வெடித்து 150 நாட்கள் ஆகியும், அந்த மாநிலத்திற்குச் செல்ல பிரதமருக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை” என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.