புதுடெல்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ.200 குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வசதியை வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு உஜ்வாலா திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு அறிவிப்பின்படி, சிலிண்டர் விலை சாதாரண பயனாளிகளுக்கு ரூ.200-ம், உஜ்வாலா திட்டபயனாளிகளுக்கு ரூ.400-ம் குறைக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத சாதாரண பயனாளிகளுக்கு தற்போது 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,100 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதால், இனிமேல் ரூ.900-க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
அதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், ரூ.200 மானியத்தில் சிலிண்டர் ரூ.900-க்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் ரூ.700-க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ளவர்களுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 9.60 கோடி பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிலிண்டர் விலை குறைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது:
பிரதமர் அளித்துள்ள பரிசு: வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார்.
ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு நம் நாட்டின்பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பரிசு இது.
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, 14.50 கோடி மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 33 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் 9.60 கோடி மக்கள் உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுவசதி பெற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பேருக்கு சிலிண்டர் வசதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கெனவே ரூ.200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு சிலிண்டர் விலை தற்போது மேலும் ரூ.200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு விலை ரூ.400 குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது.
மக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ள நிலையில், சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
‘மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.417ஆக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் அது படிப்படியாக ரூ.1,110-க்கு உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை மனதில்கொண்டே, சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது’ என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.