உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, தற்கொலை செய்துகொண்ட நடத்துனர் மோஹித் யாதவ் என்று தெரியவந்திருக்கிறது. இவர் அரசுப் போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக மாதம் 17,000 ரூபாய் சம்பளம் வாங்கி வந்திருக்கிறார். எட்டு பேர்கொண்ட இவரின் குடும்பம், மோஹித் யாதவின் சம்பளத்தை நம்பி பிழைத்துவந்திருக்கிறது.
இந்த நிலையில் மோஹித் யாதவ், கடந்த ஜூன் மாதம் பரேலி-டெல்லி ஜன்ரத் நெடுஞ்சாலையில், பயணிகள் சிலர் நமாஸ் செய்வதற்காக, டிரைவரிடம் கூறி பேருந்தை நிறுத்தியிருக்கிறார். மேலும், பேருந்தில் பயணிகளிடம், “நாங்களும் இந்துக்கள்தான். இங்கு இந்து, முஸ்லிம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது” என்று மோஹித் யாதவ் கூறியிருக்கிறார். இதனை, பேருந்திலிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார்.
இந்த வீடியோ பரவியதையடுத்து, போக்குவரத்துத்துறை எந்தவொரு அறிவிப்புமின்றி, மோஹித் யாதவையும், டிரைவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. மோஹித் யாதவின் ஒப்பந்தமும் நிறுத்தப்பட்டது. இதனால், மோஹித் யாதவின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. மோஹித் யாதவும் வேறு பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்துப் பார்த்தார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. இதனால், கடந்த திங்களன்று மெயின்புரியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் மோஹித் யாதவ்.
தன் கணவர் உயிரிழந்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ், “என் கணவர், பரேலியிலுள்ள பிராந்திய மேலாளரை செல்போனில் அடிக்கடி அழைப்பார். ஆனால், அவர் என் கணவரின் தரப்பை ஒருவரைக்கூட கேட்கவில்லை. என் கணவரின் தரப்பு நியாயம் கேட்கப்படாமலே, ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச போக்குவரத்துத்துறை என் கணவரின் வேண்டுகோளுக்குச் செவிடாகிவிட்டது. இறுதியில், என் கணவர் மனிதாபிமானத்தை விலையாகக் கொடுத்து, மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY