புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க முடிவு செய்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதோடு காஷ்மீர் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் காரணமாகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு அமலில் இருந்தபோது மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை அங்கு அமல்படுத்த முடியவில்லை. குறிப்பாக கல்வி உரிமைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை காஷ்மீரில் நடைமுறைப் படுத்த முடியவில்லை.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. தொழிலதிபர்கள் அங்கு பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர். சுற்றுலா அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்கும்போது மாநில அரசமைப்பு சாசனத்தின்படியே பதவியேற்றனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் காஷ்மீர் மக்கள் முழு மனதோடு வரவேற்கின்றனர். வாழ்வுரிமை, சொத்துரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைத்திருப்பதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்களின் உயிரிழப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. கல்வீச்சு சம்பவங்கள், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் அரிதாகி வருகின்றன. இதன் காரணமாக காஷ்மீர் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகள், 4 நாடுகளை ஒட்டி அமைந்துள்ளன. இந்த அண்டை நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகளாக இல்லை. சில நாடுகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன. நமது நாட்டின் எல்லைப்பகுதியில் ஜம்மு-காஷ்மீர் அமைந்துள்ளது. காஷ்மீர் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பல ஆண்டுகளாக காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை சந்தித்து வருகிறோம். எல்லைப் பிரச்சினை, தீவிரவாதம், ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கிட்டு காஷ்மீர் பகுதி, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவ்வாறு துஷார் மேத்தா தெரிவித்தார்.
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் 34,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதலில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. பின்னர் அவற்றுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இதேபோல ஜம்மு-காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இதுதொடர்பான விரிவான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கும்.
லடாக் பகுதி தொடர்ந்து யூனியன் பிரதேசமாக நீடிக்கும். இவ்வாறு துஷார் மேத்தா தெரிவித்தார்.