பெண்களுக்கு மாதம் ரூ.2000 : இனி இந்தியா முழுக்க கர்நாடக மாடல்தான் – ராகுல் அதிரடி பேச்சு!

கர்நாடகாவில் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் பணம் வழங்கப்படும் உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்கு கிரகலட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் 32,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்தது.

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

இந்த நிலையில் கிரகட்சுமி திட்டத்தின் தொடக்க விழா கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கலந்துகொண்டு பெண்களுக்கு ரூ.2,000 காசோலையை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் உடனிருந்தனர்.

விழாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, “கர்நாடகத் தேர்தலின்போது நாங்கள் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்திருந்தோம். காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்றுவார்கள். சொன்னபடியே இன்று ஒரு கோடி பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்பட்டுள்ளது.

பாரத் ஜோடா யாத்திரையின்போது கர்நாடகாவில் 600 கி.மீ வரை நடந்து பல ஆயிரக்கணக்கான பெண்களை சந்தித்தேன். பெண்களின் பங்களிப்பு கண்ணுக்கு தெரியாததாக உள்ளது. ஆனால், பெண்கள் தான் கர்நாடக மாநிலத்தின் அடித்தளம் என்பதை புரிந்துகொண்டேன். பணவீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதும் பெண்கள் தான். விலைவாசி உயர்வால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக பெண்கள் என்னிடம் முறையிட்டனர்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் முனைப்புடன் உள்ளதென தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக அரசானது கோடீஸ்வரர்களுக்காக பணியாற்றி வருவதாக சாடிய அவர், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கும் நலிவடைந்த மக்களுக்கும் பணியாற்ற நினைக்கிறது என்றும் கூறினார்.

மேலும் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான பெண்களுக்கு ரூ,2,000 வழங்கும் திட்டத்தை கர்நாடகாவில் தொடங்கி வைத்தேன். இந்த கர்நாடக மாடலை, பெண்களை மையப்படுத்தும் இந்த திட்டத்தை முழுவதும் செயல்படுத்த உள்ளோம் என்றும் கூறினார். கிரகலட்சுமி திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் உள்ள 1.1 கோடி பெண்கள் பயன் பெறுவார்கள் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.