பாகல்கோட், : ”கர்நாடக சாலை போக்குவரத்து கழகங்களில், 13,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,” என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சாலை போக்குவரத்து கழகங்களில் 16,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொறியாளர்கள், மெக்கானிக் என பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, பாகல்கோட்டில் நேற்று கூறியதாவது:
ஊழியர்கள் ஓய்வு பெற்றதால், கர்நாடக சாலை போக்குவரத்து கழகங்களில் 16,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில், முதல் கட்டமாக 13,000 பணியிடங்களை நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிதித் துறையின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்த பின், அதிகாரபூர்வமாக நிரப்பும் பணிகள் துவங்கும்.
சொகுசு வசதிகளுடன், புது பஸ்கள் வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதற்கேற்றவாறு ஊழியர்கள் நியமிக்கப்படுவதால், ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை இருக்காது.
இதற்கு முன்பும், போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய போது, மும்பை கர்நாடக பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement