சிக்கமகளூரு : கணவருடன் சண்டை போட்ட மனைவி, பிறந்த வீட்டுக்கு சென்றதால், கோபமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு மாந்திரீகம் செய்துள்ளார். புகாரின்படி, அவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு, மூடிகெரேவின், பனகல் அருகில் மத்திகட்டே கிராமத்தில் வசிப்பவர் சதீஷ். இவர் தன் தங்கை சுமித்ராவை, 12 ஆண்டுகளுக்கு முன் மரசனி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்திக்கு, திருமணம் செய்து கொடுத்தார்.
சில ஆண்டுகளாக, கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை நடந்தது. வீட்டு பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். கடந்த மாதம் தம்பதிக்கு மீண்டும் சண்டை வந்தது. கோபத்தில் மனைவி, தன் அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கணவர் பல முறை அழைத்தும், வீட்டுக்கு வரவில்லை. நேற்று முன்தினம், சதீஷ் வீட்டுக்கு சென்ற குருமூர்த்தி, கத்தியை காண்பித்து, மனைவியை தன்னுடன் அனுப்பும்படி மிரட்டினார்.
கத்தியை அங்கேயே போட்டு சென்றார். அதன்பின் ஏதோ ஒரு விலங்கை பலி கொடுத்து, ரத்தத்தை சதீஷ் வீட்டு முன்பாக தெளித்துள்ளார்.
தங்களுக்கு எதிராக மாந்திரீகம் செய்ததாக, குருமூர்த்தி மீது பனகல் போலீஸ் நிலையத்தில், சதீஷ் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், குருமூர்த்தியை கைது செய்தனர். சம்பவ இடத்தையும் பார்வையிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement