“அவசரம் – பால் வண்டி” என எழுதப்பட்ட வாகனங்களை சாலையில் அடிக்கடி காண்கிறோம். “பால்” அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. அதன் காரணமாகவே, கொரோனா ஊரடங்கு காலத்திலும், விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்த பொருட்களில் பாலும் இடம் பெற்றிருந்தது. தாய்ப்பாலுக்கு அடுத்து, குழந்தைக்குக் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவது பசும்பால்.
ஆனால், 1990களுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளின் தேவைக்குப் போதுமான பசும்பால் எஸ்டேட் பகுதியில் கிடைக்கவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதனாலேயே “வீட்டு முன் காய்கறித் தோட்டம் அமைக்கும், ஆடு மாடு வளர்க்கும் அனுமதியைத் திருப்பிக் கொடு” எனும் முழக்கம், 1998-1999ல் நடந்த கூலி உயர்வுப் போராட்டத்தில், பிரதான கோரிக்கைகளில் ஒன்றாகிப் போனது.
எஸ்டேட்டில் மாடு வளர்த்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு 1989 வரையிலும் அனுமதி இருந்தது. குடியிருப்புக்கு வெளியே கோழி மடம், மாடு கட்ட குச்சில் போன்றவைகளை உருவாக்கி அவற்றை பராமரித்து வந்தனர். அப்போது சில தொழிலாளர்களிடம் 4 லிருந்து 5 மாடுகள் என, நாலுமுக்கில் மொத்தமாக இருநூறுக்கும் அதிகமான மாடுகள் இருந்தன. இதுபோலவே மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி என எல்லா எஸ்டேட் பகுதிகளிலும் தொழிலாளர்கள் மாடு வளர்த்து வந்தார்கள். இதுபோக கம்பெனியும் தனியாக மாடு வைத்திருந்தது. அங்கு கறக்கும் பால் எஸ்டேட் அதிகாரிகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்தது.
மாடுகளைப் பராமரிக்க வேண்டி எல்லா எஸ்டேட்டுகளிலும் மாட்டுப்பட்டிகளை (தொழுவம்), கட்டிக் கொடுத்திருந்தது கம்பெனி. எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான மாட்டுப்பட்டியில் மாடுகளை அடைத்துவிட வேண்டும். மாடு வைத்திருப்பவர்கள் தினமும் காலை, மாலை என இரு வேளை அங்கு சென்று, மாடுகளுக்கு தீவனம் கொடுத்தபிறகு, பால் கறந்துவிட்டு வருவார்கள். மாடுகளை பராமரிக்க, பணி நிரந்தரம் செய்யப்பட்ட, ஆண் தொழிலாளிகளில் சிலரை கம்பெனி நியமித்து இருந்தது.
அந்த காலகட்டத்தில், மாட்டுப்பட்டி நிரம்பி வழியும். பலருக்கும் அவர்களது மாடுகளை அடைக்க அங்கு இடம் இருக்காது. அந்த தொழிலாளர்கள், மாடுகளை பராமரிக்க, வீட்டுக்கு அருகிலேயே, நான்கு புறமும் கம்புகளைச் சேர்த்து கட்டி, மேலே தார்ப்பாய் அல்லது தகரம் வைத்து சிறிய குச்சிலை உருவாக்கியிருந்தார்கள்.
மாடு வைத்திருக்கும் தொழிலாளர்கள், மதிய உணவு இடைவேளையின் போது அல்லது சாயங்காலம் வேலை முடிந்தபிறகு மாடுகளுக்கு புல் அறுக்க காட்டுக்குப் போவார்கள். அதற்காகவே மாடு வைத்திருக்கும் வீட்டு ஆண்கள் பலரும் மதியம் 2 மணி வரை மட்டுமே இருக்கும் வேலைக்கே போவார்கள்.
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண், பெண் இருவரும் புல் அறுக்கச் செல்வார்கள். பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள். மாஞ்சோலையில் குடியிருப்பிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோயில் தட்டை பகுதி வரை புல் அறுக்கச்சென்று, தலைச்சுமடாகக் கொண்டு வருவார்கள்.
மழை நேரங்களில் மாட்டு அட்டையும், உண்ணிகளும் மாடுகளின் உடம்பு முழுக்க கடித்துத் தொங்கும். மாட்டு அட்டை பாதி பீன்ஸ் நீளத்திற்கு இருக்கும். அட்டை/ உண்ணி கடிக்கும் இடத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டே இருக்கும். புல்லும், இலைதழைகளும், சுத்தமான தண்ணீரும் குறையாது கிட்டுவதால் அங்குள்ள மாடுகள் எளிதில் நோய்வாய்ப்பட்டதில்லை. நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் இருந்த போதிலும், எஸ்டேட் பகுதியில் கால்நடை மருத்துவர் இருந்ததே இல்லை. தீராத நோய் வந்ததாலும், மகப்பேறு நேரத்தில் உரிய சிகிச்சை இன்மையின் காரணத்தாலும் மாடுகள் சில இறந்து போயுள்ளன.
பால் கறக்கும் தொழிலாளர்கள் பலரும் அன்றன்று எஸ்டேட் வேலை முடிந்த பிறகே, மாடுகளை பராமரிக்கச் செல்வர். அதிக எண்ணிகையில் மாடுகள் இருக்கும் சில வீடுகளில், கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் மாடுகளை பராமரிக்க வேண்டி வேலைக்குச் செல்லாமல் இருந்தனர். மற்ற தொழிலாளர்களைப் போல அல்லாமல், மாடு உரிமையாளர்கள் ஒப்பீட்டளவில் கஷ்டமில்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.
கறந்த பாலை வீட்டுத்தேவைக்கு எடுத்தது போக, மீதமுள்ளதை இதர தொழிலாளிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். அதனால் எஸ்டேட்டில் இருக்கும் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்குத் தங்கு தடையின்றி பசும்பால் கிடைத்து வந்தது.
நாலுமுக்கில், பலரிடமும் மொத்தமாக பால் வாங்கி அதனை சில்லறை விற்பனை செய்துவந்தார் “பால் பண்ணை” என்று அழைக்கப்பட்ட தொழிலாளியான வி.பி. நடராசன். அவரது வீட்டிற்கு காலையிலும், மாலையிலும் தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு பால் வாங்கப் போவோம். அவர் பால் மட்டுமின்றி, நாளிதழ்களையும், வாரப் பத்திரிகைகளையும் விற்பனை செய்வார்.
இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் “வாராந்தரி ராணி” வார இதழையும் மற்றும் “இராணி முத்து” என்ற மாத இதழையும் எனது பெற்றோர் அவரிடம் வாங்குவர். அங்கிருந்த நாட்களில் இதழ் வீட்டுக்கு வந்ததும், முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்துவிடுவேன். அப்போது எங்களுக்கு பாடப்புத்தகம் தவிர்த்து, வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள் அவைகள் தாம். வாசிப்பின் மீதான ஆர்வத்தை அவைகளே தூண்டின. விற்பனை நோக்கில்தான் என்றாலும், எஸ்டேட் மக்களுக்கு அன்றைய சூழலிலும் பத்திரிகைகளைக் கொண்டு வந்து சேர்த்த பால் பண்ணை அண்ணாச்சி எங்கள் எஸ்டேட் வாழ்வில் முக்கியமான நபர்களில் ஒருவராகிப் போனார்.. மறுபக்கம், அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கே மிகுந்த சிரமம் நிலவிய காலத்தில், எனது பெற்றோர் போன்றவர்கள் புத்தகங்களையும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதையும் பிரதானப்படுத்தியது வியப்பளிக்கவே செய்கிறது.
இந்த நிலையில், நாலுமுக்குக்கு மேலாளராக வந்த கில் சிங், 1989ல் எஸ்டேட்டில் தோட்டங்கள் அழிப்பு மற்றும் குச்சில் அழிப்பினைத் தொடர்ந்து அடுத்து வெளியிட்ட அறிவிப்பு – மாடு வளர்க்கத் தடை.
மாடு வளர்ப்பவர்கள் கையில் அதிகமாக பணம் புரள்கிறது. அவர்களில் பலரும் அடிக்கடி எஸ்டேட் வேலைக்கு வராமல் இருக்கிறார்கள் என்பதால் இதனை முடிவுக்குக் கொண்டுவருவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். ஒரு வீட்டுக்கு ஒரு மாடு மட்டுமே பராமரிக்கலாம் என்று உத்தரவிட்டார். மாஞ்சோலை குரூப் மேனேஜர் கான்வில்கர் ஆதரவுடன் இந்த உத்தரவு எல்லா எஸ்டேட்களிலும் நடைமுறைக்கு வந்தது. மாடு மேய்க்கும் வேலைக்கு நியமிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
அதிக மாடு வைத்திருப்பவர்கள், அந்த எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டால் அவர்களுக்கு கங்காணி வேலை தரப்படும், அவர்கள் குடியிருக்க வீடில்லாதவர்களாக இருந்தால், புதிதாக காலியாகும் வீடுகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மறுப்பவர்களின் வீட்டில் இருக்கும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு அன்றாட வேலையும், புதிதாக வேலைப் பதிவும் மறுக்கப்பட்டது.
எஸ்டேட்டில் தொடர்ந்து வேலைபார்க்க வேண்டுமென்றால், அந்த உத்தரவினை அப்படியே அனுசரித்துப் போவதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேறு வழி இல்லாமல் போன காரணத்தால், அதன்படியே நடந்தார்கள். வீட்டுக்கு ஒரு மாடு என்ற உத்தரவு கொஞ்சகாலம் போனதும், ஒரு லயனுக்கு ஒரு மாடு என்றானது. மேலும், இனி எஸ்டேட்டில் தொழிலாளர்கள் யாரும் புதிதாக மாடு வாங்கக்கூடாது என்றும் உத்தரவு வெளியானது. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதுவும் நடப்புக்கு வந்தது. மாட்டுப்பட்டியின் நீளம் சுருங்கியது. மாடுகளை தனியே அடைத்துவைத்த குச்சில்கள் அழிக்கப்பட்டன.
பால் குடிக்கும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்குக் கூட, பால் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்டேட்டில் பால் பொடி அறிமுகமானது. எஸ்டேட்டில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பராமரிக்கப்படும் பிள்ளைப்பாடியிலும் அவ்வப்போது பால் பொடி பயன்பாட்டுக்கு வந்தது.
வேலை நாட்களில் தொழிலாளர்களுக்கு காலையிலும், மாலையிலும் தேநீர் கொடுத்து வந்தது கம்பெனி. தேயிலைத் தொழிற்சாலையில் வைத்து தயாரித்த தேநீரை காட்டுக்குக் கொண்டு வருவார்கள். அதனை ஈத்தை இலையில் ஊற்றி குடிப்பார்கள். பால் தட்டுப்பாடு உண்டாக்கப்பட்ட பின்னர் தேநீர், பால் பொடி கொண்டு தயாரிக்கப்பட்டது. எஸ்டேட் தேநீர் கடைகளிலும் பாக்கெட் பாலும், பால் பொடியும் பயன்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல தொழிலாளர்களின் வீடுகளில் பால் சேர்க்காத “கட்டன்” மட்டுமே சாத்தியமானது.
10.05.1999 அன்று நாலுமுக்கு தொழிலாளிகளான செல்வராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்கு கம்பெனி மெமோ கொடுத்தது. அதில், அவர்கள் கம்பெனியால் அனுமதிக்கப்பட்ட, ஒரு வீட்டுக்கு ஒரு மாடும், ஒரு வயதுக்குக் குறைவான கன்றுக்குட்டியும் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும், கூடுதலாக மாடு வளர்ப்பதால், 10 நாட்களுக்குள் அவற்றை எஸ்டேட்டிலிருந்து வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். அதேபோன்ற 30.05.2000 நாளிட்ட மேமோவும், பின்னர் 16.06.2000 அன்று குற்றச்சாட்டு அறிக்கையும் மிக்கேல் என்ற தொழிலாளிக்கும் கொடுத்தது கம்பெனி. இதேபோல இதர எஸ்டேட் தொழிலாளிகள் பலரும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
ஆனால் குரூப் மேனேஜர், எஸ்டேட் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஐயாமார்களுக்கு பால் கொடுக்க வேண்டி தனியாக வளர்க்கப்பட்ட கம்பெனி மாடுகளின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவைகளைப் பராமரிக்கும் தொழிலாளிகளின் எண்ணிக்கையும் அப்படியே தொடர்ந்தது.
தாங்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ நெருக்கடிகளை பொருட்படுத்தாமல், தேயிலைக்காட்டு வாழ்வின் சின்னச் சின்ன சந்தோசங்களை கொண்டாடி வாழ்ந்து வந்தவர்கள் எஸ்டேட் மக்கள். ஆனால், கம்பெனிக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதாக நினைத்து, அடுக்கடுக்கான நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டே இருந்த ஏ.எஸ். கில் சிங் என்ற சிங்கு தொரை பொறுப்பு வகித்த காலம், அங்கு வாழ்ந்த ஒரு தலைமுறையினருக்கு அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட இருண்ட காலமாகிப் போனது. முப்பது ஆண்டுகள் கழித்து இன்றளவும் அதன் தாக்கம் எஸ்டேட் பகுதியில் நீடிக்கவே செய்கிறது.
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், ஜெயராணி, கார்த்திக், இராபர்ட் சந்திர குமார்