புதுடெல்லி: முதலீடுகளை ஈர்ப்பதற்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது மிகவும் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: பாதுகாப்பான சூழ்நிலை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்துகின்றன. இதற்கு உத்தர பிரதேச மாநிலத்தை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய உ.பி. மாநிலம் குற்றச் செயல்களுக்கும் அதிகம் பெயர் போனதாக இருந்தது. ஆனால், இப்போது அந்த மாநிலத்தில் அச்சம் இல்லாத சமுதாயம் உருவாகியுள்ளது.
குற்றங்கள் குறைந்துள்ள சூழ்நிலையில், மாநிலத்தில் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. அதேநேரம், குற்றங்கள் உச்சத்தில் இருக்கும் மாநிலங்களில்முதலீடுகளும் சரிசமமாக குறைந்து வருவதையும் பார்க்கிறோம்.
இந்தியப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது,இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாஉருவெடுக்கும். இது, சாமானியர்களுக்கு பல நன்மைகளை உருவாக்கும்.
எந்தவொரு நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைய ஒவ்வொரு துறையும் வளர்ச்சி காண்பது அவசியம். உணவு முதல்மருந்து வரை, விண்வெளியில் இருந்து ஸ்டார்ட் அப் வரை அனைத்து துறைகளும் வளரும்போதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காணும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புல்டோசர் அரசியல்: உத்தர பிரதேச மாநிலத்தில் போலி என்கவுன்டர்கள் மூலம் பலர் கொல்லப்படுவதாகவும், புல்டோசர் அரசியல் நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் உ.பி. சட்டம் ஒழுங்கைபி ரதமர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.