மேட்டூர்: மேச்சேரி அருகே ஆண்டியூர் வரட்டு ஏரியில் மீன் வளத்தைப் பெருக்க, குடிநீர் குழாயை உடைத்து நீர் நிரப்பியதாக ஊராட்சித் தலைவர் மீது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியூர் வரட்டு ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டி 13-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குழாய் மூலமாக போர் மூலமாகவும், குடிநீர் திட்டம் மூலமாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த ஏரியில் மீன் வளத்தைப் பெருக்கவும், தண்ணீரின்றி அவை உயிரிழப்பதைத் தடுக்கவும் ஊராட்சித் தலைவர் சந்திரன் குடிநீர் குழாயை உடைத்து ஏரிக்கு நீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், “கொப்பம்பட்டி பகுதி கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். வாரத்துக்கு 2 முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டியூர் வரட்டு ஏரியில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக குடிநீர் குழாயை உடைத்து நீரை நிரப்புகின்றனர். அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் கூறுகையில், “கொப்பம்பட்டியில் குடிநீர் குழாயை உடைத்து தனியார் நிலத்துக்கு நீர் விட்டதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்தோம். அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கு நீர் நிரப்பி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. கொப்பம்பட்டி ஊராட்சி தலைவரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இதுகுறித்து கொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரனை தொலைபேசியில் அழைத்த போது, நமது அழைப்பை ஏற்கவில்லை.