இஸ்லாமாபாத்: டோஷாகானா ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று உத்தரவிட்டது.
பரிசுப் பொருட்கள்
பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான், அந்நாட்டின் பிரதமராக 2018 – 22 வரை பதவி வகித்தார்.
பாக்., பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு, வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அந்நாட்டின் கருவூலமான, ‘டோஷாகானா’வில் வைத்து பாதுகாப்பது வழக்கம்.
சம்பந்தப்பட்ட தலைவர்கள் விரும்பினால், நியாயமான விலை கொடுத்து அந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. மாறாக, அவர்களாக அதை தங்களுடன் எடுத்து செல்ல கூடாது.
பாக்., பிரதமராக இம்ரான் பதவி வகித்த மூன்றரை ஆண்டுகளில், 14 கோடி ரூபாய் மதிப்பிலான 58 பரிசுகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இதில் பல பரிசுகளை அவர் குறைந்த விலை கொடுத்தும், சில பரிசுகளை பணம் கொடுக்காமலும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு வெளியில் விற்று இம்ரான் பணம் ஈட்டியதாகவும், அந்த வருமானத்தை அவர் மறைத்துள்ளதாகவும் பாக்., தேர்தல் கமிஷனில் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் புகார் அளித்தனர்.
தகுதி நீக்கம்
இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்தது. பின், அவர் மீது இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்து அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான், அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆமிர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.
இதில், டோஷாகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு அவசர கதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில் இருந்து இம்ரானை விடுவித்து உத்தரவிட்டனர்.
அவருக்கு அளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து இம்ரான் கான் ஐந்தாண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டது ரத்தாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்