"13 வருஷமா உன் பின்னாடி சுத்துறேனே உனக்கு இரக்கம் இல்லையா".. சீமான் சரவெடி பேச்சு

ஈரோடு:
கட்சி ஆரம்பித்து 13 வருடங்களாக ஒரு வெற்றியை கூட பெறாததை காமெடியாக சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

இலங்கை போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட விரக்தியிலும், ஆத்திரத்திலும் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தவர் சீமான். 2010-இல் கட்சி தொடங்கிய சீமான் எந்தவொரு தேர்தலையும் புறக்கணிக்காமல் களம் கண்டு வருகிறார். மேலும், இதுவரை பல கட்சிகள் நாம் தமிழரை கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்தாலும் தனித்தே போட்டியிட்டு வருகிறார். சீமானின் தமிழ் மொழி பற்று, விவசாயத்தை பாதுகாப்பதற்கான கொள்கை போன்ற சித்தாந்தங்களால் ஏராளமான இளைஞர்கள் அவருக்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.

நாம் தமிழரின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் போதிலும், இதுவரை எந்தவொரு தேர்தலிலும் ஒரு சீட்டில் கூட நாம் தமிழர் வென்றதில்லை. வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம்; பெரும்பாலான சாதிக்காரர்கள் இருக்கும் தொகுதியில் மாற்று சாதிக்காரரை வேட்பாளராக நிறுத்துவது போன்ற கொள்கையை பின்பற்றுவதும் அவரது தொடர் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோடு தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிமுகப்படுத்தினார். அப்போது, நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறித்து நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார் சீமான்.

அவர் கூறுகையில், “எவ்வளவு நாள்தான் ஒருதலையாகவே காதலிச்சிட்டு இருக்குறது.. நானும் ஒரு 13 வருஷமா உன் (மக்கள்) பின்னாடி சுத்துறேன். நீ ஏறெடுத்து கூட பாக்க மாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்றது? திருப்பி காதலிக்கக் கூடாது வேண்டாம். கண்ணையாவது அடிச்சு விடலாம்ல. நானும் மனுசன் தானே. கொஞ்சம் இரக்கம் காட்டு ப்ளீஸ்” என காதலியிடம் பேசுவதை போல சீமான் பேசியதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.