• ஏற்கனவே 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
• எஞ்சியுள்ள அனைவருக்கும் தேவையான பணம் விரைவில் வழங்கப்படும்.
• அனைத்து விசாரணைகளையும் 1924 துரித எண் மூலம் மேற்கொள்ளலாம்.
• போலியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் பணத்தை திரும்பப் பெறவும் தயங்க மாட்டோம்.
– நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இரண்டாவது குழுவினருக்கான கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
தற்போது தகுதி பெற்றுள்ள 15 இலட்சம் “அஸ்வெசும” பயனாளி குடும்பங்களில் சுமார் 15 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், தகுதிபெற்ற அனைவருக்கும் விரைவாக இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“அஸ்வெசும” தொடர்பான அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
போலியான தகவல்களை சமர்ப்பித்து “அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு “அஸ்வெசும” நலன்புரி சட்டத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றிருந்தால், வழங்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளவும் தயங்க மாட்டோம் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,
“அஸ்வெசும” பயனாளிகளில் முதல் குழுவினருக்கு அரசாங்கம் என்ற வகையில், கொடுப்பனவுகளை வழங்க முடிந்ததுள்ளதாகவும், அதில் 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு மிக விரைவில் வழங்கப்படவுள்ளதோடு, எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் விபரங்களை அறிய வேண்டுமெனில், 1924 என்ற துரித தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், வார நாட்களில் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இவ்வாறு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன,
“அஸ்வெசும வேலைத் திட்டத்தின் மூலம் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகுதியுடைய 15 இலட்சம் குடும்பங்களில் 791,000 குடும்பங்களின் கணக்குகளில் சுமார் 05 பில்லியன் ரூபா வைப்பிலிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 683,000 இற்கும் அதிகமானோரின் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 111,000 பயனாளிகளுக்கு அடுத்த சில நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாவது குழுவிற்கான கொடுப்பனவுகளை அடுத்த வாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் இந்தத் தொகை முழுவதையும் வைப்பிலிட்டு நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தில் தகுதி பெற்ற அனைவரும் பலன்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் எனவே, மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தகுதியுடைய அனைவருக்கும் நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்குவதோடு, மாதந்தோறும் இவர்களுக்கான பணம் வழங்கப்படும் என்றும் இதில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
PMD