மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு 51 அடியாக சரிந்துள்ளது. பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி, நீர்வரத்து விநாடிக்கு 9,085 கன அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 1,875 கன அடியாகவும், நீர்மட்டம் 51.11 அடியாகவும், நீர் இருப்பு 18.51 டிஎம்சியாகவும் இருந்தது.
பின்னர் பருவமழை காரணமாக அதிகரித்தது. தொடர்ந்து, 52 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வந்தது. பின்னர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.98 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 51 அடியாக சரிந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ளது. தற்போது, அணையில் நீர் இருப்பு 19.08 டிஎம்சியில் இருந்து 18.44 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 2,031 கன அடியிலிருந்து 792 கனஅடியாகவும் குறைந்தது. பாசனத்துக்கு அணையின் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 2,000 கனஅடியும், சுரங்க மின் நிலையம் வழியாக 6,000 கனஅடியும் என 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
5,000 கனஅடி திறப்பு: முன்னதாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, “காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டியதில் 54 டிஎம்சிதண்ணீர் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அதற்கு கர்நாடக அரசின் அதிகாரிகள், “கர்நாடகாவில் நிகழாண்டில் போதிய அளவில் மழை பொழியவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர்இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்துவிடப்படவில்லை. எனவே, தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை. தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்” என தெரிவித்தனர்.
நிறைவாக பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம். அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்” என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை விவசாயிகள் போராட்டம்: இதனிடையே, காவிரி வாரிய ஆணையத் தலைவரை மாற்ற வலியுறுத்தி தஞ்சை ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணையரை மாற்ற வேண்டும், உடனடியாக தமிழக அரசு காவிரியில் தண்ணீர் பெற்றத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் மேஜை முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்து, அலுவலக வாயில் முன்பு அனைத்து திரண்டு கண்டன முழக்கமிட்டனர்.
இதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஆர். சுகுமாறன் தலைமையில் விவசாயிகள், காவிரி நீர் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து, மண் பானையில் தண்ணீரை நிரப்பி, தண்ணீர் காவடி எடுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.