Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவினரை கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைக் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று கேள்விப்பட்டேன்… அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் இப்படிப்பட்ட தகவல்கள் அதிகம் பரவுகின்றன. நீங்கள் கேள்விப்பட்ட இந்தத் தகவலில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. கடிப்பது என்பது கொசுவின் தன்மை, அது எல்லோரையும் கடிக்கவே செய்யும். ஆனால் மனிதர்களில் சிலர் அடிக்கடி பூச்சிக்கடிகளுக்கு உள்ளாகும் தன்மையைக் கொண்டிருப்பார்கள்.

தேனீக்கள் கொட்டும்போதுகூட இதை நீங்கள் பார்த்திருக்கலாம். பலர் கூட்டமாகச் சேர்ந்து நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களில் யாரோ சிலரை மட்டும்தான் தேனீக்கள் தேடிவந்து கொட்டிவிட்டுப் போகும். மற்றவர்களைச் சீண்டியே இருக்காது.

எனவே அவர்களது பளீர்நிற உடை, அவர்களது உடலில் இருந்து வெளியேறும் பிரத்யேகமான வாடை, கசிவு போன்ற ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டு தேனீக்கள் கொட்டுவதும், கொசுக்கள் கடிப்பதும் நடந்திருக்கலாம். மற்றபடி ஒரு நபரின் ரத்தப் பிரிவுக்கும் இதுபோன்ற பூச்சிக் கடிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எந்த வகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது. கொசுக்கடிதானே என அலட்சியமாக இருப்பது சரியானதல்ல.

mosquito

கொசு கடிப்பதாலேயே தட்டணுக்கள் குறைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அது சீரியஸான பிரச்னை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே கொசுக்கடியிலிருந்து விலகி இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லோருமே பின்பற்ற வேண்டியது அவசியம். கொசுக்கள் கடிக்காதபடி சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.