மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “கடந்த ஒன்பது ஆண்டுகளாக சகோதரிகளைப் புறக்கணித்த நீங்கள்ம், ரக்ஷா பந்தனுக்காக இப்போது சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறீர்கள். சிலிண்டர் விலையைக் குறைத்ததன் நோக்கத்தை அனைவரும் அறிவார்கள்” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் ரக்ஷா பந்தனுக்கு மோடிக்கு ராக்கி கட்டியது குறித்து குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, “உண்மையிலேயே ராக்கி கயிறு கட்டுவதாக இருந்தால், பில்கிஸ் பானு உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் மணிப்பூர் பெண்களிடமிருந்து இதை தொடங்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க-வில் மோடியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இதில் பேசிய சரத் பவார், மாயாவதி இந்தியா கூட்டணியில் பங்கேற்காதது குறித்து, “மாயாவதி இதற்கு முன்பு பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்தியா கூட்டணியில் பங்கேற்பது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும். எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச தொடங்கவில்லை. இக்கூட்டத்தில் இது குறித்துப் பேசப்படலாம். இது குறித்து மாநிலத் தலைவர்களிடம் பேசும்படி கேட்டுக்கொள்வோம். இந்தியா கூட்டணி நாட்டில் வலுவான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும்” என்று தெரிவித்தார்.
கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கட்சியை விட்டுச் சென்றவர்ளுக்கு வாக்காளர்களாகிய மக்கள், இறுதி முடிவைக் கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார். நாளை கூடும் கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY