”எனக்கு வயது 70. 40 ஆண்டுகாலமாக ஆனந்த விகடனை வாசிக்கிறேன். எனக்கு ஒரு கனவு. வாழ்நாளில் ஒருமுறையாவது பிரசன்னா -சினேகாவை சந்தித்து ஒரே ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும். நீங்கள் என் கனவை நிறைவேற்றுவீர்களா?” – என்று திருப்பூரில் உள்ள உடுமலையில் வசித்து வரும் ஜெகன் சத்தியராஜ், நம்மிடம் வேண்டுகோள் வைத்தார்…
இந்த விஷயத்தை பிரசன்னா – சினேகாவிடம் சொன்னோம்.. ஆச்சரியத்தில் நெகிழ்ந்தார்கள். தங்கள் தந்தை வயதுள்ள ரசிகர் ஜெகனை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறியும், அவருடன் தங்கள் நேரத்தை செலவழித்தும் மகிழ்ந்தனர். அங்கே கிடைத்த இடைவெளியில் நாம் பேசியதின் தொடர்ச்சி இது. .
உங்க ரெண்டு பேரின் முதல் படத்தை இயக்கினது ஒரே இயக்குநர் தான். சினேகாவுக்கு ‘விரும்புகிறேன்’, பிரசன்னாவுக்கு ‘ஃபைவ் ஸ்டார்’ ரெண்டையுமே இயக்கினது சுசி கணேசன் தான். இப்படி ஒரு விஷயத்தை நினைச்சு பார்த்ததுண்டா?
சினேகா : ”யெஸ். அப்பவே நாங்க நினைச்சிருக்கோம். இவர்கிட்டக்கூட (பிரசன்னா) ‘உங்கள அறிமுகப்படுத்தினதும் சுசி சார் தானே’ன்னு கேட்டிருக்கேன். எங்க கல்யாண அழைப்பிதழை சுசி சார்கிட்ட கொடுத்த போது, அவருக்கும் ஆச்சரியம்.’
பிரசன்னா ” ”எல்லாமே காரண காரியத்தோடுதான் நடக்கும்னு சொல்வாங்க. அதுக்கு நாங்க ஒரு உதாரணம்.”
உங்க ரெண்டு பேரையும் பார்க்கறப்ப… ஒரு விஷயம் புரியுது. உங்க கல்யாணத்தின் போது இருந்த, அதே காதல், ரொமான்டிக், அன்பு எல்லாம் இப்பவும் அப்படியே இருக்குது… அந்த ரகசியத்தைச் சொல்லலாமே..
சினேகா: ”ரொம்பவே சிம்பிள் விஷயம்தான். எங்க ரெண்டு பேரோட எதிர்பார்ப்பே, அன்பு காண்பிக்கணும் என்பதுதான். இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட நான் எந்த எதிர்பார்ப்பையும் வச்சது கிடையாது. அவர்கிட்ட நான் சண்டை போடுறதே, ‘வீட்டுக்கும் நேரம் ஒதுக்குங்க’னு சொல்வேன். அவ்வளவு தான். இது வாங்கித்தரல. அது வாங்கித்தரலனு மெட்டீரியலா விஷயங்களுகாக சண்டை போட்டது கிடையாது.
பிரசன்னா: ”நமக்கு ஒருத்தர் மேல அன்பு இருக்கு. பாசம், காதல் இருக்குதுனா அதை நாம சரியா வெளிப்படுத்தணும். நம்ம ஊருல பலருக்கும் அன்பை வெளிக்காட்டத் தெரியாது. உதாரணத்துக்கு அப்பா – பையன் உறவு. ரெண்டு பேருக்குமிடையே ஒரு பாசம் இருக்கும். ஆனா, அதை வெளிப்படுத்திக்க மாட்டாங்க. ஆனா, அம்மா – பையன் பந்தம், இயல்பா வரக்கூடிய விஷயம். ஆனா, கணவன் -மனைவி உறவு என்பது, கல்யாணத்துக்கு பிறகு, ‘என் மனைவிதானே… என் கணவன் தானே’னு நினைச்சிடுவோம். அதை வெளிப்படுத்தத் தவறிடுவோம். இவங்க ஆரம்பத்துல இருந்தே சொல்ற ஒரு விஷயம், ‘அன்பை வெளிக்காட்டுங்க’ என்பதுதான். அன்பை காண்பிச்சிட்டே இருக்கணும். நேத்திக்கு அன்பைக் காண்பிச்சிட்டனே, இன்னிக்கும் ஏன் காண்பிக்கணும்னு நினைச்சிடக்கூடாது. ஃபேமிலி பாண்டிங் என்பது குழந்தைகளுக்கு அப்பத்தான் புரியும்.
படப்பிடிப்பில் வெளியூர்ல இருந்தால் கூட, ‘சாப்டியா, எப்படி இருக்கே? குழந்தைகள் என்ன பண்றாங்க? அவங்க எப்படி இருக்காங்க?’னு அக்கறையா விசாரிக்கறதுதான், குடும்பப் பிணைப்பை மேலும் உறுதியாக்கும்னு இவங்க (சினேகா) கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். இந்த ஐயா (ஜெகன்) எங்களை சந்திக்கலைனாலும் எங்க மீது அவருக்கு இருக்கற பாசம், அதே அளவு அதே அன்போடுதான் இருந்திருக்கும். ஆனா, அதை அவர் வெளிக்காட்டும் போது எங்களுக்கும் அதே அன்பு, சந்தோஷம் கிடைக்குது. அன்பை வெளிக்காட்டும் போதுதான் அது முழுமையாகுது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கறது போல சின்னச் சின்னச் சண்டைகள் வரும். ஆனா, அந்த சண்டையை எவ்வளவு நேரம் எடுத்துப்போறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கு. எதாவது ஒரு பாயிண்ட்ல நீ ஸாரி.. நான் சாரினு சொல்லிடுவோம்.”
உங்க கல்யாண வீடியோவைப் பார்த்து ரசிக்கறதுண்டா?
பிரசன்னா : ”ரெண்டு பேருமே ஒண்ணாதான் இருக்கோம். தினமும் பார்க்கறோம். அதனால கல்யாண வீடியோவை தினமும் பார்க்கணும்னு கிடையாது. அவங்க (சினேகா) கூட சில சமயங்கள்ல கல்யாண வீடியோவைப் பார்த்துட்டிருப்பாங்க. பொதுவா, கல்யாண வீடியோவைப் பார்க்கறது செம போர். நான் தூங்கிடுவேன்.”
சினேகா: ”நான் கவனிப்பேன். சில சமயங்களில் எங்கள் கல்யாணத்தில் நடந்த விஷயங்களை எங்கள் ரசிகர்கள் போஸ்ட் பண்ணிட்டிருப்பாங்க. நான் அதையெல்லாம் நான் பார்த்துடுவேன். அதை இவர்கிட்டேயும் காண்பிச்சிடுவேன். அப்ப இவர் ரியாக்ஷனை பார்க்கணுமே.. ‘இதெல்லாம் எதுக்குமா காண்பிச்சிட்டிருக்கன்னு சொல்வார்.. ”
குழந்தைங்க விஷயத்துல, யார் கண்டிப்பு காட்டுவீங்க? யார் செல்லம் கொடுப்பீங்க?
சினேகா : ”அவர் தான் ஸ்ட்ரிக்ட். குழந்தைங்ககிட்ட நான் ரொம்பவே ஜாலியா இருப்பேன்.”
பிரசன்னா : யாராவது ஒருத்தர் கண்டிப்பு காட்டணும். ரெண்டு பேரும் செல்லம் கொடுத்துட்டால், அப்புறம் எங்கே சரி பண்ணணுமோ, அங்கே சரி பண்ண முடியாது. சனி, ஞாயிறுகள்ல குழந்தைகள் தூங்கட்டுமேனு அவங்க (சினேகா) நினைப்பாங்க. பசங்க இந்த வயசில கத்துக்காமல் எப்போ கத்துக்குவாங்கனு நான் நினைப்பேன். கராத்தே, மியூசிக் கிளாஸ்னு அனுப்பிச்சிடுவேன்.”
பிரசன்னா, சினேகாவுடன் வாச்கர் ஜெகன் சத்தியராஜுக்கு கிடைத்த வரவேற்பையும், அவர்களின் உரையாடலையும் காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் பண்ணுங்க