கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் தொடங்கிய ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில், தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
Match 1: Pakistan beat Nepal by 238 runs.
MOM: Babar Azam (151 runs)#AsiaCup2023 #PAKvNEP pic.twitter.com/IlkeghTfRh
— #AsiaCup2023 (@TheCricketSpot) August 30, 2023
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ரன்களை குவித்தார். பாபர் அசாமுடன் இணைந்து முதலில் ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை எடுத்தது.
அடுத்து மட்டை வீச களம் இறங்கிய நேபாள அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார். துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணியின் சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ரன்களை குவித்து விக்கெட்களை இழந்த நிலையில், இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், நேபாளம் 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 104 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், 342 ரன்களை எடுத்திருந்த பாகிஸ்தான் அணி, 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆசிய கோப்பை தொடரில்,. பாகிஸ்தானில் 4 போட்டிகள், இலங்கையில் 9 போட்டிகள் என இறுதிப்போட்டியை சேர்த்து மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி நேற்று முடிந்த நிலையில் இன்னும் 12 போட்டிகள் எஞ்சியுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.