அஜித் குமார் ‘தல’யாக மாறுவதற்கு முன்னால் நடித்த ஆரம்பக் காலப் படங்களில் ஒன்று ‘ஆசை’. தொடர்ந்து சுமாரான படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்திற்கு முதன் முதலில் பெரிய பிரேக் தந்த படம், ‘ஆசை’தான். அரவிந்த் சுவாமிக்குப் பின்னர் ரசிகைகளின் வரவேற்பை அதிக அளவில் பெறும் அளவிற்கு ஸ்மார்ட்டான தோற்றத்தில் அஜித் இருந்தார்.
வலிமையான வில்லன் பாத்திரத்தை பிரதானமாக வைத்து ஒரு ஃபேமிலி திரில்லரை உருவாக்க விரும்பினார் இயக்குநர் வஸந்த் (வஸந்த் சாய்). பாலசந்தரின் ஸ்கூலில் இருந்து வெளிவந்த திறமையான மாணவரான வஸந்த் இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்கள், ‘கேளடி கண்மணி’ மற்றும் ‘நீ பாதி நான் பாதி’. இந்த இரண்டிலும் குருநாதரான பாலசந்தரின் பாணி இருப்பதைக் கவனிக்கலாம். ஆனால் வஸந்த் பயணிக்க விரும்பிய பாதை வேறு. இந்த வித்தியாசம் ‘ஆசை’ படத்தில் நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் ‘மேக்கிங் ஸ்டைல்’ கணிசமாக இருந்தது. ‘ஆசை’ படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
மண், பெண், பொன் – இவை மூன்றின் மீதுள்ள ஆசைதான் உலகத்தில் நடக்கும் பெரும்பாலான போர்களுக்கும் பகைமைகளுக்கும் காரணம் என்கிறார்கள். ‘ஆசை’ படத்தின் கதையும் அதேதான். மச்சினிச்சி மீது ஆசைக் கொண்டு, அதையே ஒரு வெறியாக வளர்த்துக் கொண்டு மனைவியின் தங்கையை அடைவதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு ‘சைக்கோ’ கேரக்ட்டரைப் பற்றிய படம் இது. தமிழ் சினிமாவில் அதுவரையிருந்த வழக்கமான வில்லத்தனங்களை ஒதுக்கிவிட்டு தனது பிரத்யேக பாணியில் இந்தக் கேரக்ட்டரைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். வஸந்த் எழுதிய கேரக்ட்டர் ஸ்கெட்ச்சும் மிக வலிமையாக இருந்தது.
தமிழகத்தில் நடக்கும் ஒரு ராமாயண தெருக்கூத்தில் இந்தப் படம் தொடங்கி, அதே போல் டெல்லியில் நடக்கும் ஒரு நாடகத்தின் காட்சியோடு முடிவது போல திரைக்கதையை அமைத்திருந்தார் வஸந்த். ராவணன் எத்தனை திறமைசாலியாக, நல்லவனாக இருந்தாலும் பெண்ணாசைதான் அவனை வீழ்த்தியது என்பதை வைத்து பிரகாஷ்ராஜின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
ராவணன் கேரக்ட்டரை அடிப்படையாகக் கொண்ட ‘ஆசை’
தனது அப்பாவுடன் சென்னையில் வாழ்கிறாள் யமுனா. அவளது அக்கா கங்கா திருமணமாகி டெல்லியில் வசிக்கிறாள். அக்காவின் கணவன் ஒரு மிலிட்டரி ஆபிசர். யமுனாவின் வாழ்க்கையில் ஓர் அழகான இளைஞன் குறுக்கிடுகிறான். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.
அக்காவின் பிரிவு தாங்காமல் ஒரு கடிதம் எழுதுகிறாள் யமுனா. அக்காவின் குழந்தை காண்பதற்காக தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் அதனுடன் இணைக்கிறாள். அதுதான் அவளது வாழ்க்கையில் பெரிதாக விளையாடப் போகிறது என்பதை அப்போது அறியவில்லை. தங்கையின் ஆசைப்படி அக்கா தன் குடும்பத்துடன் சென்னை வருகிறாள். கூடவே வினையும் வருகிறது. ஆம், அவளுடைய கணவனான மேஜர் மாதவன், தன்னுடைய மச்சினியின் அழகைக் கண்டு ரகசியமாக மோகிக்கிறான். அவளை எப்படியாவது அடைய வேண்டுமென்று திட்டமிடுகிறான். இதற்காகப் பல வன்மச் செயல்களைச் கொஞ்சமாக கொஞ்சமாகச் செய்கிறான். யமுனாவின் காதலனுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருகிறான். தன்னுடைய மாப்பிள்ளை மிகவும் நல்லவர் என்று அப்பாவித்தனமாக மாமனார் நம்பிக் கொண்டிருப்பது மாதவனுக்குச் செளகரியமாகப் போய் விடுகிறது.
பிறகு என்னவானது? யமுனாவை அடைய மாதவன் செய்யும் சதித்திட்டம் வெற்றி பெற்றதா? யமுனா தன் காதலை அடைந்தாளா இல்லையா என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன் விவரிக்கிறது ‘ஆசை’ திரைக்கதை.
‘தல’ அஜித்தும் கல்கத்தா அழகி சுவலட்சுமியும்
ஹீரோ ஜீவாவாக அஜித்குமார். அரும்பு மீசை மாறாமல், அப்போதுதான் பதின்ம வயதைத் தாண்டியது போல அதியிளமை தோற்றத்தில் ஸ்மார்ட்டாக இருந்தார் அஜித். ஒரு மழைக்காலத்தில் பல்லவன் பேருந்தில் ஆரம்பிக்கும் இவர்களின் காதல், பிரேக் பிடிக்காத பஸ் போல அலைபாய்ந்து உருண்டு பிரண்டு ஒருவழியாக நிமிர்கிறது. ஓர் இளம் காதலனின் பரிதவிப்பை, ஏக்கத்தை, நிராசையை, ஆர்வத்தை, கோபத்தை சரியாக வெளிப்படுத்தியிருந்தார் அஜித். குறிப்பாகக் காதலியின் புறக்கணிப்பால் வேதனைப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு அத்தனை இயல்பாக இருந்தது. அதைப் போலவே பிரகாஷ்ராஜின் நுட்பமான வில்லத்தனத்தைத் துணிச்சலாக எதிர்க்கும் காட்சிகளிலும் அஜித்தின் நடிப்பு நன்றாக இருந்தது. இவருக்கு டப்பிங் குரல் தந்திருந்தவர் நடிகர் சுரேஷ்.
இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவைத்தான் முதலில் அணுகினார் வஸந்த். ஆனால் அப்போது சூர்யாவிற்கு ‘நடிப்பதில் விருப்பமில்லை’ என்கிற காரணம் சொல்லப்பட்டது. இணை தயாரிப்பாளரான ஸ்ரீராம், ஒரு விளம்பரப்படத்தில் நடித்திருந்த அஜித்தை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய, வஸந்த் உடனே ‘ஓகே’ சொன்னார்.
நாயகி யமுனாவாக சுவலட்சுமி. ‘முகத்தில் அப்பாவித்தனம் வழியக்கூடிய’ தோற்றத்தில் உள்ள பல பெண்களைத் தேடினார் வஸந்த். எதுவும் சரியாகத் தோன்றாத நிலையில் ஒரு வங்காளத் திரைப்படத்தில் நாயகியாக நடித்த பெண்ணைப் பரிந்துரைத்தார் யூகிசேது. சுவலட்சுமியின் முகத்தைப் பார்த்தவுடன் வஸந்த்திற்கு பிடித்துப் போயிற்று. “கவர்னர் வீட்டுல சுத்தித் திரியற மான்குட்டி மாதிரி” என்று சுவலட்சுமியைப் பற்றி பிரகாஷ்ராஜ் சொல்வது போல் ஒரு வசனம் படத்திற்குள் வரும். வஸந்த் ரொம்பவும் ஃபீல் ஆகித்தான் அதை எழுதியிருக்கிறார் போல. அந்த வசனத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார் சுவலட்சுமி. ‘புல்வெளி’ பாட்டில் இதைக் காட்சி வடிவில் உணர முடியும்.
அழகும் நடிப்புத் திறமையும் ஒருங்கே அமைந்த நடிகைகள் ஒருசிலர்தான் இருப்பார்கள். அதில் சுவலட்சுமி முக்கியமானவர். மழைத் தண்ணீரில் தான் விளையாடிக் கொண்டிருப்பதை அஜித் கவனித்தவுடன் ஏற்படும் வெட்கம், சட்டென்று முத்தமிட்டவுடன் ஏற்படும் கோபம், திடீரென்று ஏற்பாடு செய்யப்படும் பதிவுத் திருமணத்தை மறுக்கும் கண்ணியம், அக்கா மற்றும் குழந்தையின் மீது பொழியும் பாசம், பிரகாஷ்ராஜின் உண்மை முகத்தை அறிந்ததும் ஏற்படும் அதிர்ச்சி என்று பல முகபாவங்களில் அசத்தி சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருந்தார்.
சைக்கோ கேரக்ட்டரில் மிரட்டியிருந்த பிரகாஷ்ராஜ்
இந்தப் படத்தின் முக்கியமான பிளஸ் பாயிண்ட்டுகளில் ஒன்று பிரகாஷ்ராஜின் அட்டகாசமான நடிப்பு. இந்தக் கேரக்ட்டருக்கு மலையாள நடிகரான மனோஜ் கே.ஜெயனை நடிக்க வைக்கலாம் என்று வஸந்த் முதலில் யோசித்து வைத்திருந்தாராம். ஆனால் பிரகாஷ்ராஜைப் பரிந்துரைத்தவர் பாலசந்தர். அவருடைய படப்பிடிப்பில் பிரகாஷின் நடிப்பைப் பார்த்து பிரமித்து உடனே தனது படத்திற்காக இணைத்து விட்டாராம் வஸந்த்.
ஒரு பக்கம் சைக்கோத்தனம் கொண்டிருந்தாலும், பார்ப்பதற்கு ஜென்டில்மேன் மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பது வஸந்தின் ஐடியா. அதனால்தான் இந்தக் கேரக்ட்டரை ‘ராணுவ அதிகாரியாக’ எழுதியிருந்தார். ஒழுக்கம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கேப்டன் மாதவன் சரியாக இருந்தாலும் அவருடைய ஒரே பலவீனம், தகாத காதல்தான். மோக வெறிதான். கிட்டத்தட்ட ராவணன் மாதிரியேதான் இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. ‘அவர்கள்’ திரைப்படத்தின் ரஜினிகாந்த், ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் விஜயன் ஆகிய இரண்டு கேரக்ட்டர்களும் பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எழுதுவதற்கு உதவியாக இருந்திருக்கின்றன.
தனது பாத்திரத்தை பிரகாஷ்ராஜ் கையாண்டிருந்த விதம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. மனைவி, குழந்தை மற்றும் மாமனாரின் முன்பு மிக இனிமையானவராக இவர் பழகும் போது ‘அடடா… எத்தனை அருமையான மனிதர்?!’ என்றுதான் நமக்கும் தோன்றுகிறது. ஆனால் கல் இருந்த காரணத்திற்காக அத்தனை சோற்றையும் குப்பைத் தொட்டியில் தூக்கிக் கொட்டும் போது ‘பகீர்’ என்கிறது. சுவலட்சுமியை அடைவதற்காகவும் அவரை அஜித்திடமிருந்து பிரிப்பதற்காகவும் இவர் ரகசியமாக முன்னெடுக்கும் ஒவ்வொரு பிளானும் திகில் ரகம். பிளாஸ்டிக் தாளால் மனைவியின் முகத்தைச் சுற்றிக் கட்டி விட்டு, அவர் உயிருக்காகப் போராடுவதை ரொட்டியில் வெண்ணைத் தடவிக் கொண்டே நிதானமாகப் பார்க்கும் காட்சியில் மிரட்டிவிடுகிறார். அஜித்துடன் ‘டேட்டிங்’ சென்றிருக்கும் சுவலட்சுமியை உடனே வீட்டுக்கு வரவழைப்பதற்காகக் குழந்தையை மழை நீரில் நனைய விடும் காட்சி டெரரானது.
“ஒருத்தன பார்த்தவுடனே சொல்லிடுவேன். அவன் நல்லவனா… கெட்டவனான்னு… அப்படி ஒரு திறமை எனக்கிருக்கு!” – இப்படிப் படம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் அப்பாவித் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன் தனது திறமையான நடிப்பைத் தந்திருந்தார். மகள்களிடம் பாசம் காட்டும் அப்பா, அவர்களுக்கு ஒரு துயரம் என்றால் இடிந்து அமரும் அப்பா என்று ஒரு தகப்பனின் சித்திரத்தைச் சரியாக அளித்திருந்தார் விஸ்வநாதன். தனது மகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்த மருமகனை இவர் மனஉறுதியுடன் பழிவாங்கும் க்ளைமாக்ஸ் காட்சி உக்கிரமானது.
வஸந்த்தின் திறமையான இயக்கம்
திறமையான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகள் என்று சலிப்பில்லாமல் நகரும்படியாக இந்தப் படத்தை துள்ளலான இளமைப் பாணியில் இயக்கியிருந்தார் வஸந்த். 143 என்பதின் சங்கேத பாஷையின் அர்த்தம் அப்போதைய இளையதலைமுறையிடம் புழக்கத்தில் இருந்ததை படத்தில் உபயோகித்திருந்தார். நட்சத்திர ஹோட்டலில் அஜித்தின் பர்ஸை, பிரகாஷ்காஷ் திருடி விடுவதும் “எனக்கு உங்க மேலதான் சந்தேகம். உங்களை செக் பண்ணணும்” என்று அஜித் வெடிப்பதுமான அந்த பரபரப்பான சீனை மறக்கவே முடியாது.
அஜித்திற்கும் சுவலட்சுமிக்குமான லவ் டிராக் மிகையான ரொமான்ஸ் இல்லாமல் ஊடலும் கூடலுமாக நம்பகத்தன்மையுடன் சித்திரிக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத முத்தத்தினால் முதலில் கோபமடையும் காதலி, பிறகு காதலனுக்கு சுரம் என்பதை அறிந்ததும் ‘கட்டிக்க வேணான்னு சொன்னேனா?’ என்று கேட்பது சுவாரஸ்யம். ஆணைப் பொறுத்தவரையில் எல்லாமே உடனுக்குடன் நடந்துவிட வேண்டும். ஆனால் பெண்கள் பலவற்றையும் யோசித்துதான் எதையும் முடிவெடுப்பார்கள். இந்தக் குணாதிசயம் இருவரிடமும் இருக்கும்படியாக கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை எழுதியிருப்பது வஸந்த்தின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. “நீ எனக்கு கிடைக்காம போயிடுவியோன்னு பயமாயிருக்கு” என்று பதிவுத் திருமணத்திற்கு திடீரென்று அஜித் ஏற்பாடு செய்ய, “பெத்தவங்களுக்கு தெரியாம எப்படி முடியும்?” என்று சுவலட்சுமி மறுப்பது யதார்த்தமான காட்சி.
அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்கிய தேவா
‘ஆசை’ படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகின. கானா மற்றும் குத்துப் பாடல்களின் அடையாளமாகக் கருதப்பட்ட தேவா, மிக இனிமையான மெலடி பாடல்களைத் தந்தார். தூர்தர்ஷன் காலத்திலிருந்தே தேவாவை பழக்கம் என்பதால் அவரைப் பல முறை சந்தித்து ‘பாடல்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்’ என்று வஸந்த் சொல்ல “இப்படியெல்லாம் கேட்டு கேட்டு என்னை யாரும் வேலை வாங்க மாட்றாங்களே?!” என்று தேவாவும் சந்தோஷப்பட, அந்தக் கூட்டணியின் உழைப்பு பாடல்களின் வெற்றியில் தெரிந்தது. பாலசந்தரைப் போலவே பாடல்களைப் படமாக்குவதில் வஸந்த் மிகவும் மெனக்கிடுவார். எனவே காட்சி ரீதியாகவும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. ‘புல்வெளி புல்வெளி’ பாடலில் மாண்டலின் ஸ்ரீனிவாசன் இசைத்திருந்தது கூடுதல் சிறப்பு. ஹரிஹரன் பாடிய ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலின் பின்னணியில் ஆடிய நடனக்கலைஞர்களின் அசைவுகள் பார்க்கவே வசீகரமாக இருக்கும். ‘மீனம்மா’ பாடலில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் ‘silhouette’ பின்னணியில் தோன்றும் நடனம் அற்புதமாக இருந்தது.
பி.சி.ஸ்ரீராமின் மாணவரான ஜீவா இந்தப் படத்திற்குச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருந்தார். குருநாதரின் பாணியும் அதன் வசீகரமான ஸ்டைலும் ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரைக்கும் இருந்தது. குறிப்பாக பாடல் காட்சிகளை ஜீவா கையாண்டிருந்தது சிறப்பு.
‘கண்ணே’ ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்று சில தலைப்புகளை முதலில் யோசித்த வஸந்த், பிறகு ‘ஆசை’ என்ற தலைப்பை வைத்தார். ஒரு பெண்ணின் மீது ஹீரோவிற்கும் ஆசை, வில்லனுக்கும் ஆசை என்பதால் பொருத்தமாக இருந்தது. பிறன்மனை நோக்காத பேராண்மையைக் கொண்டவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும் என்கிற செய்தியை ஒரு வலிமையான எதிர்மறை பாத்திரத்தின் வழியாக உணர்த்தினார் வஸந்த்.
அஜித் மற்றும் சுவலட்சுமியின் க்யூட் தோற்றம் மற்றும் நடிப்பு, வில்லனின் பாத்திரத்தை அட்டகாசமாக கையாண்டிருந்த பிரகாஷ்ராஜின் நடிப்புத்திறமை, தேவாவின் இனிமையான பாடல்கள், வஸந்த்தின் புதுமையான இயக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தத் திரைப்படத்தை இன்றும் கூட ஆசை ஆசையாகப் பார்க்கலாம்.