புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையின் உரிமைமீறல் குழுவில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை இடைநீக்கம் செய்து சபநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழு முன்பு நேற்று ஆஜராகி தான் தெரிவித்த கருத்துகளுக்காக சவுத்ரி வருத்தம் தெரிவித்தார். மேலும், யாருடைய மனதையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் கூறினார். இதையடுத்து, சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது.
இதுகுறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “மக்கள வையில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை இக்குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த தீர்மானம் விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.