‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு: எதிர்க்கட்சிகள் முடிவு

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையில் தொடங்கி உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்நாள் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் தொகுதி பங்கீடு குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவுக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

எனினும் கூட்டத்தில் பங்கேற்ற பல தலைவர்கள் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனைகள் தெரிவித்தனர்.

இதன்பின் தலைவர்களுக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இரவு விருந்து அளித்தார். இதில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர் என கூறப்படுகிறது. விருந்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, “கூட்டம் நன்றாக இருந்தது. விவரம் நாளை உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

புதிய கட்சிகள் சேர்ப்பு: ‘இண்டியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி இணைவது உறுதியாகியுள்ளது. அசோம் ஜாதிய பரிஷத், ரஜோர் தல், அஞ்சலிக் கன் மஞ்ச்-புயான் ஆகிய மூன்று வடகிழக்கு மாநில கட்சிகளும் ‘இண்டியா’ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நாளைய கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

சோனியா உடன் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு: ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது ஒய்எஸ்ஆர்டிபி கட்சியை காங்கிரஸுடன் இணைக்க போகிறார் கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்த நிலையில், சோனியா காந்தியை டெல்லியில் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.