ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்த போட்டியை தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், போட்டி நடைபெறும் இலங்கையின் பல்லக்கல்லே மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 90 விழுக்காடு மழை பெய்யும் என கூறப்பட்டிருப்பதால் இப்போது வருண பகவானை நோக்கி ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டனர்.
ஒருவேளை போட்டி நடைபெற்றால் யாருக்கு வாய்ப்பு? என முன்னாள் வீரர்கள் பலரும் கணித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து முக்கியமான கணிப்பு ஒன்றை கூறியுள்ளார். அவர் பேசும்போது, 20 ஓவர் போட்டியைபோல் நினைத்துக் கொண்டு இந்தியா விளையாடக்கூடாது. ஏனென்றால் பாகிஸ்தானின் பந்துவீச்சு செம டஃப்பாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங்கா? பாகிஸ்தான் அணியின் பவுலிங்கா? என கேட்டால் நிச்சயம் பாகிஸ்தானின் பவுலிங் தான் செம ஸ்டிராங்காக இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஒன்றும் டெப்த்தாக இல்லை.
ஷாகீன் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்வதில் கில்லாடி. அவருடைய பந்துவீச்சை இந்தியா எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்பதில் தான் போட்டியின் வெற்றி தோல்வி இருக்கிறது. குறிப்பாக ஓப்பனிங் இறங்கும் ரோகித் சர்மா மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் விழ ஆரம்பித்தால் பின்னால் வரும் ராவுப், நசீம் இன்னும் உற்சாகமாகி துல்லியமாக தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். இது இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கு வழிவகுக்கும். மேலும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்கும்போது மிடில் ஆர்டர் மீது அழுத்தம் அதிகரிக்கும். குறிப்பாக விராட் கோலி மீது ஒட்டுமொத்த அழுத்தமும் இருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் தொடக்க விக்கெட்டை பாகிஸ்தான் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீழ்த்த முனைவார்கள். இது இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியாக இருக்கும். பாகிஸ்தான் பந்துவீச்சை ஒப்பிடும்போது இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு அச்சுறுத்தும் வகையில் எல்லாம் இல்லை. கூடவே பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. பாபர் அசாம் நல்ல பார்மில் இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒன்றிரண்டு வீரர்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.