இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
இந்தியாவிலுள்ள லடாக்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள தாக ராகுல் காந்தி அண்மைக் காலமாக புகார் கூறி வருகிறார். சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி கூறும்போது, “லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நான் லடாக் சென்றிருந்தபோது உள்ளூர் மக்களும் இதைத் தெரிவித்தனர். ஆனால் ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
அண்மையில் அருணாச்சல பிரதேசத்தையும், அக்சய் சின் பகுதியையும் சீனா தனது வரைபடத்தில் இணைத்திருப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. இது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி டெல்லியில் நேற்று கூறியதாவது:
சீனா வரைபடம் வெளியிட்டுள்ள விவகாரத்தில் ராகுல் காந்தி கூறுவது முழுவதும் அடிப்படை ஆதாரமற்றவை. அவர்கள் வெளியிட்ட வரைபடத்தை மத்திய வெளியுறவுத்துறை ஏற்கெனவே நிராகரித்துவிட்டது என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ளவில்லை.
சீனா நிலத்தை ஆக்கிரமித்த சம்பவம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சியில் நடந்தது. அவருக்கு சரித்திரம் தெரியாது. அதனால்தான், அவர் தொடர்ந்து இப்படி புகார் கூறி வருகிறார். ராகுலுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சீன வரைபடத்தை நம்புகிறார். ஆனால் நமது வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சொல்வதை நம்பவில்லை. நேரு, காந்தி குடும்பத்தினர் எப்போதும் சீனாவை நம்புகின்றனர். அதேபோல் பாகிஸ்தானையும் நம்புகின்றனர். அது அவர்களின் பிரச்சினை. அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.