நெதர்லாந்து நாட்டு அரசு சார்பில் `1,000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டத்தின் தொடக்க விழா அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள காது கேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் ஃபிளவர் கான்வென்டில் நேற்று நடைபெற்றது.
திட்டத்தைத் தொடங்கி வைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, ‘‘தமிழ்நாட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.40 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தினமும் 1,000 மில்லியன் லிட்டருக்கும் மேலாகக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் 544 கூட்டுக் குடிநீர்திட்டங்கள் மூலம் தினமும் 2,104 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 12 மாநகராட்சிகள், 67 நகராட்சிகள், 344 பேரூராட்சிகள் மற்றும் 52,321 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 4.53 கோடி பேர் பயன்பெறுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தினமும் 5.36 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 3,122 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள `1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் சென்னைக்குத் தேவைப்படும் குடிநீரை முழுமையாக வழங்க முடியும்’’ என்றார்.
புதுமையான இந்தத் திட்டம் குறித்துச் சூழலியலாளரும் ‘கேர் எர்த் டிரஸ்ட்’ நிர்வாக அறங்காவலரான முனைவர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் பேசும் போது, “லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில், இந்த முன் மாதிரி திட்டத்தைச் செயல்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சுமார் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தியாவிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாகத் திகழ்வதோடு, காது கேளாத மற்றும் பார்வையற்ற குழந்தைகள், பெரியவர்களைச் சமூகத்துடன் இணைந்து செயல்படத் தயார்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதிகள் சுமையற்ற சூழலையும், வெள்ள காலப் பாதிப்புகளைக் குறைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இந்தத் திட்டம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி மாற்றியமைக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு 13-க்கு ஏற்ப உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறத்தில் பசுமையும், பல்லுயிர் பெருக்கமும் ஏற்படும்’’ என்றார்.
நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், நெதர்லாந்து நாட்டின் துணை தூதர்கள் ஹென்க்ஓவின்க், எவூட் டி விட், ஜெர்மன் நாட்டின் துணை தூதர், மைக்கேல் குச்லெர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏவாஃபென்னஸ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-நமது நிருபர்