மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரை இது:
ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் தலைவர்களின் 18-வது உச்சிமாநாட்டை புதுடெல்லியில் நடத்த இந்தியா தயாராகி வருகிறது. இத்தருணத்தில், அனைவருக்குமான, ஒரு சுகாதார கட்டமைப்பினை உருவாக்க முடியும். உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு நாடுகளை இணைக்கின்ற ஒரு பாலத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
காந்திநகரில் நடைபெற்ற சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில் நமது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில் “பொதுநன்மைக்காக நமது புதிய கண்டுபிடிப்புகளை வழங்குவோம். மீண்டும் மீண்டும் ஒரே விசயத்துக்கு நிதியுதவி செய்வதை தவிர்ப்போம். தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமான வகையில் கிடைப்பதை உறுதி செய்வோம்” எனக்கூறி உறவுப் பாலத்துக்கான அடித்தளம் இட்டிருந்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்காக, உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி, பரிசோதனை முயற்சிகள் வேர்பிடித்துள்ள சமநிலையற்ற தன்மையை எடுத்துக்காட்டியுள்ளன. ஒன்றோடொன்று தொடர்புடையதாக உலகம் இன்று மாறிவருகிறது. ஒரு நாட்டிலிருந்து வெளிப்படும் நோய்க்கூறு என்பது உலகம் முழுவதற்குமே ஓர் அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. இந்நிலையில், இதற்கான தடுப்பூசிகள், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் இதர தீர்வுகளை அனைத்து நாடுகளும் சமமான வகையில், உரிய நேரத்தில் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, உலகளாவிய கட்டமைப்பு மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றை நாம் ஏற்க வேண்டியது அவசியமாகும்.
உலகளாவிய மேடை என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதாவது, தீர்வுகளைப் பெறுவதற்குத் தடைகளை எதிர்கொள்வோரின் குரல்களை அது கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள செயல்திறனையும் வலைப்பின்னல்களையும் மிகவிரைவில் வளர்த்தெடுப்பதாக அது இருக்க வேண்டும். செயல்துடிப்போடும் எளிதில் ஏற்கத்தக்கதாகவும் அது அமைய வேண்டும். வேகமாக மாறிவரும் தேவைகள் மற்றும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களுக்கு ஏற்ப, துரிதமாக செயல்படக்கூடிய வகையிலான நெகிழ்வுத் தன்மையை உள்ளார்ந்தவகையில் பெற்றதாகவும் அது இருக்க வேண்டும். வெளிப்படையானதொரு கட்டமைப்பில், தெளிவான, பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் பொறுப்புமிக்கதாகவும் அது இருக்க வேண்டும்.
அனைவராலும் வாங்க முடிகின்ற மருத்துவரீதியான தீர்வுகளை அது துரிதமாக வழங்க வேண்டும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அவசியம். உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆலோசனையோடு, இத்தகையதொரு மேடையை தாமதமுமின்றி அமலாக்க வேண்டும். இதற்கான இடைக்கால ஏற்பாடு ஒன்றை ஜி-20 அமைப்பின் மூலமாக உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
இதன் மூலம், அடுத்து ஏதாவது சுகாதார நெருக்கடி வெடித்தெழும்போது, நாம் தயார்நிலையிலிருந்து அதனை எதிர்கொள்ள முடியும். மருத்துவ உலகின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சூழலைக் கூட்டாக வளர்த்தெடுத்தல் தேவை. குறிப்பாக வளரும் நாடுகளில் தடுப்பூசிகள், சிகிச்சை மற்றும் சோதனைக்கான பொருட்களை பகுதிவாரியாக தயாரிப்பதை வலுப்படுத்த ஜி-20 உறுப்புநாடுகள் வலியுறுத்தின. இதன் மூலம் மருத்துவ ரீதியான நெருக்கடிகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்த முடியும்.
டிஜிட்டல் முறையிலான சுகாதாரத்துக்கான உலகளாவிய முன்முயற்சியின் தொடக்கம்: டிஜிட்டல் முறையானது உலகளாவிய சுகாதாரத்தை அடைவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஊக்கிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கோவிட்-19 இன் போது பொதுசுகாதாரத்தில் நிலைமையை மாற்றும் டிஜிட்டல் கருவிகளின் திறனை இந்தியா உணர்ந்தது. தொற்றுநோய் மூலம், டிஜிட்டல் முறையின் பொதுப் பொருட்களாகக் கருதப்படும் கோ-வின் மற்றும் இ-சஞ்சீவனி போன்ற இணையதளங்கள் இந்த நிலையை முற்றிலுமாக மாற்றின.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய நூறு கோடிக்கும் மேலான மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது உள்ளிட்ட சுகாதார சேவைகள் வழங்கும் வழியை முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தின. ஏற்கெனவே, இந்தியா நாடுதழுவிய அளவிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்(ஏபிடிஎம்) என்ற டிஜிட்டல் முறையிலான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
இது, நோயாளிகள் தங்கள் மருத்துவப் பதிவுகளைச் சேமித்து வைக்க, சிகிச்சை மற்றும் பின்தொடர்தல்களை உறுதிசெய்ய உதவுகிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் முறையிலான தங்களது சுகாதாரக் கொள்கைகள் அல்லது உத்திகளை உருவாக்கியுள்ளன. எனினும் சில நாட்களுக்கு முன்பு வரை, டிஜிட்டல் சுகாதார முன்முயற்சிகளில் கற்றவைகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினாலும், பொதுவான மேடையோ மொழியோ இல்லை.
டிஜிட்டல் முறையிலான சுகாதாரத்தில் இதுபோன்ற துண்டிக்கப்பட்ட வகையில் செயல்படுவது என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நகல் எடுப்பதற்கு வழி வகுக்கிறது. இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ், ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் தலைமையிலான டிஜிட்டல் சுகாதார உலகளாவிய முன்முயற்சி தொடங்கப்பட்ட பிறகு அது மாற உள்ளது. இந்த முயற்சியில் ஜி-20 நாடுகளின் ஏகோபித்த ஆதரவு உள்ளது.
இது, உலக நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, பிளவுபட்ட டிஜிட்டல் முறையிலான சுகாதார வெளியில் இருந்து, உலகளாவிய டிஜிட்டல் முறையிலான சுகாதார ஆட்சியை நோக்கி உலகம் வலுவோடு நகரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சி உயர்தர டிஜிட்டல் முறையிலான சுகாதார அமைப்புகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிநபர் உரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளித்து, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில், நோயாளிகள் தங்கள் சுகாதாரச் சேவைகளை அணுக உதவுகிறது. இவ்வாறு, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் முறையிலான சுகாதார சேவைகளின் தரம் ஒரு குறிப்பிட்ட தரநிர்ணயத்துக்காக உறுதிப்படுத்தும் வழிமுறைகளை வழங்க வேண்டும். நாடுகளின் டிஜிட்டல் சுகாதாரப் பயணத்தை பதிவு செய்யவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு தளம் உருவாக்கப்படுகிறது.
இதன்மூலம், சுகாதாரத்தை அடைவதற்கானப் பாதையின் நீளத்தைக் குறைப்பதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும். ஜி20 நாடுகள் குறைந்த கார்பன் அளவைக் கொண்ட, உயர்தர, நீடித்ததொரு பருவநிலையைத் தாங்கும்படியான சுகாதார அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டுள்ளன. நிகர-பூஜ்ஜிய இலக்குகளை அடைய அனைத்து துறைகளும் தங்களால் முடிந்ததை செய்யும் நேரத்தில், நமது சுகாதாரத் துறை பின்தங்கியதாக மாறாமல் இருப்பதையும் உறுதிசெய்கிறது.
விளைவு குறித்த ஆவணத்தில், ஜி20 நாடுகள் ஒரே சுகாதார அணுகுமுறை மூலம் நுண்ணுயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளிக்க உறுதியளித்துள்ளன. முழுமையான சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும்படியான ஒருங்கிணைந்த மருத்துவத்தைச் சுற்றி உலகம் முழுவதிலும் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளை புத்துயிர் பெறச் செய்வதும், ஜி-20 போன்றவை மூலம் மனிதகுலத்துக்கு அவற்றின் இதுவரை பயன்படுத்தப்படாத பலன்களை வழங்குவதும் நமது பொறுப்பு என்றே கருதுகிறோம்.
கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவத்துக்கான மையத்தை (WHO-Global Centre for Traditional Medicine) திறந்து வைத்து, நமது பண்டைய சுகாதார ஞானத்தின் கதவுகளை உலகுக்கு திறந்து வைத்தார். ஜி20 அமைப்பில் அந்தப் பாரம்பரியத்தை நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அதன் உறுப்பு நாடுகள் சுகாதாரத்தில் ஆதாரங்களின் அடிப்படையிலான பாரம்பரிய மற்றும் ஒன்றுக்கொன்று உதவி செய்யும் மருத்துவத்தின் சாத்தியமான பங்கை அங்கீகரித்து வருகின்றன.
“ஆரோக்யம் பரமம் பாக்யம், ஸ்வாஸ்திய சர்வார்த்த சாதனம்” என்று காலங்காலமாக நீடித்து வரும் ஸ்லோகம் கூறுகிறது, அதாவது, “நோய்களிலிருந்து விடுபடுவதே இறுதி வழி; நல்ல உடல்நலம் மற்ற எல்லா செல்வங்களையும் அடைவதற்கான அடிப்படை”. நம்மை தலைகுனியச் செய்த தொற்றுநோயின் அனுபவத்துக்குப் பிறகு, ஜி20 இல் இணைந்துள்ள உறுப்புநாடுகளாகிய நாம் அதில் கவனம் செலுத்தி, செயல்பட வேண்டிய நேரம் இதுவே என்றும் முடிவு செய்துள்ளோம்.