புதுடில்லி, காவிரியில் கூடுதலாக விடுவிக்கப்பட்ட நீரை தமிழ கம் தவறாக பயன்படுத்தியதாக, கர்நாடகா கூறியுள்ளதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை உள்ளது. காவிரியில் உரிய பங்கை அளிக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு, ‘காவிரியில் உபரியாக விடப்பட்ட, 69.7 டி.எம்.சி., தண்ணீரை தமிழகம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது’ என, குறிப்பிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் நேற்று புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரியில் மிகையாக விடுவிக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த, 69.7 டி.எம்.சி., தண்ணீரை நாங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக கர்நாடகா கூறியுள்ளதில் உண்மைஇல்லை.
தமிழகத்தில், குறுவை பயிருக்கு, 32.2 டி.எம்.சி., தண்ணீர் தேவை. ஆனால், நாங்கள், 22.44 டி.எம்.சி., தண்ணீர் தான் பயன்படுத்தியுள்ளோம். அதனால் நாங்கள் அதிகமாக பயன்படுத்தியுள்ளதாக கூறுவது தவறு.
சம்பா பருவத்துக்கு, ஜூலை மாதத்தில் விவசாய நிலங்களை தயார் செய்ய வேண்டும். இந்த காலத்தில், சம்பா பயிர்களுக்காகவும் நாங்கள் தண்ணீரை பயன்படுத்தியுள்ளோம் என்பதை, கர்நாடகா கவனிக்கவில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, 14.93 லட்சம் ஏக்கரில், 5.60 லட்சம் ஏக்கரில் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கும், மீதமுள்ள பகுதிகளை தயார் செய்வதற்கும் தண்ணீர் தேவை. இதனால், கூடுதலாக தண்ணீரை நாங்கள் பயன்படுத்தவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று நடந்த விசாரணையின்போது, ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆக., 12 – 26 காலகட்டத்தில், 1.49 லட்சம் கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது’ என, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்