“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உங்கள் கடமையை செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்” என கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சோழ மண்டல வட்டார, நகர நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இதில் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கரய்யர், கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “கட்சித் தலைமை தமிழகத்தில் தலைவரை மாற்றிவிடும் என பலரும் பேசினர். ஆனால் மாற்றம் என்பது எல்லா நிலைகளிலும் வருவதுதான். ஆரம்பம் இருந்தால், முடிவும் இருக்கும். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வெற்றிபெற வேண்டும் என்பதல்ல, இந்தியா என்ற அமைப்பு இருக்க வேண்டும் என்பதுதான். கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா இருக்கிறது. ஆனால் பல பிராந்தியங்களாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.
மகாத்மாவா காந்தியடிகள்தான் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி இந்தியாவை தோற்றுவித்தார். காந்தியடிகளுக்கே ஆடையை இப்படி அணியலாம் என்று சொன்னது தமிழ்நாடுதான். இப்போது பா.ஜ.க-வினர் இந்தியாவில் 30 கோடி முஸ்லிம்கள், 20 கோடி தலித்துகள் தேவையில்லை என நாட்டை துண்டாடிட நினைக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக உள்ளது.
காஷ்மீர் மக்களை ஒருங்கிணைத்தது நேரு தான். தற்போது காஷ்மீர் மக்களைப் பிரித்து அரசியல் செய்கின்றன ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. ஆகவே, நாம் தமிழகத்தில் பேசுவதை ஆணித்தரமாகப் பேசவேண்டும், அப்படி பேசினால்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க உள்ளே வராது. காவிரி நதிநீர்ப் பிரச்னையை தற்போது எதிர்கட்சிகள் கிளப்பினர். ஆனால் காங்கிரஸ் கட்சி, முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் சட்ட முயற்சிக்கு ஆதரவு அளிக்கும். கர்நாடக முதல்வரை நாங்கள் கேட்டபோது, கர்நாடகாவிலுள்ள பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் செய்கிறார்கள் என்கின்றனர்.
கர்நாடகாவில் காவிரி தண்ணீர் திறப்பைக் கண்டித்து முதலில் குரல் கொடுத்தது முன்னாள் பா.ஜ.க முதல்வர் பொம்மை, பிறகு எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் எதிர்க்கின்றனர். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் யாரும் வாய்திறக்கவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க புதிய ஒரு சில திட்டங்கள்கூட செயல்படுத்தவில்லை. தமிழக அரசிடமிருந்து ஒன்பது சதவிகிதம் வரியைப் பெற்றுக்கொண்டு, ஒரு சதவிகிதம்தான் திருப்பிக் கொடுக்கின்றனர்.
சமீபத்தில் சி.ஏ.ஜி அறிக்கையில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள 600 செக்போஸ்டுகளில் 5 செக்போஸ்டுகளில் கணக்கில் ரூ.132 கோடி ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். கடலுர் மாவட்டம், பரனூர் செக்போஸ்ட்டில் சுமார் ரூ.6.5 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு எம்.எல்.ஏ., எம்.பி., ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால் நீங்கள் நினைப்பது நடக்கும். உங்கள் வீட்டுவாசலில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றுங்கள். உங்கள் தெருவிலுள்ள நண்பர்கள், உறவினர்களிடம் கூறி காங்கிரஸ் கொடியேற்றச் சொல்லுங்கள்… கட்சி தானாக வளரும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. தமிழகத்தில் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆகவே உங்கள் தெருவிலுள்ள கூட்டணிக் கட்சி வாக்குகளைச் சிதறாமல் கவனித்துக்கொள்ளுங்கள், வெற்றி நமக்குதான். கூட்டணிக் கட்சி பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் ஏமாற்றமடைந்துவிடுவீர்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY