கூகுள் Search-ல் ஜெனரேட்டிவ் AI அம்சம்: பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி: கூகுள் தேடுபொறியில் ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அம்சத்தை இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை பயன்படுத்த பயனர்கள் தங்களது விருப்பத்தை சேர்ச் லேப்ஸில் தெரிவிக்க வேண்டி உள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் செயலிகளில் ஜெனரேட்டிவ் ஏஐ-யின் பங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சத்தை கூகுள் சேர்சில் இணைத்துள்ளது கூகுள். தற்போது இது இந்தியாவில் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. இப்போதைக்கு கூகுள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷனில் இதை பயன்படுத்த முடியும். வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கூகுள் இந்தியா ஜெனரேட்டிவ் ஏஐ அம்சத்தை டெமோ செய்தது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களின் தேடுதல் அனுபவத்தை ஜெனரேட்டிவ் ஏஐ துணையுடன் மேம்படுத்தும் என கூகுள் தெரிவித்துள்ளது. சேர்ச் லேப்ஸ் மூலம் இது அறிமுகமாகி உள்ளது. கூகுள் சேர்ச் பதில் தர இயலாது என பயனர்கள் எண்ணும் கேள்விகளுக்கும் இந்த அம்சத்தின் மூலம் பதில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேகமாக, புதிய இன்சைட்ஸ் மற்றும் வியூபாயிண்ட்ஸ், எளிய முறையில் பயனர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் சார்ஜ்டு சேர்ச் அனுபவத்தை பயனர்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக பயனர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கான பதிலையும், அது சார்ந்துள்ள பதில்களையும் இது வழங்குமாம். உதாரணமாக ட்ரெக்கிங் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினால் அதற்கான பதிலையும் கொடுத்து, அந்த பயணத்தின் போது சூப்பரான படங்களை எப்படி க்ளிக் செய்வது என்பதையும் கூடுதலாக தனி லிங்க் மூலம் தெரிவிக்கும். அதே நேரத்தில் இது சோதனை முயற்சி என கூகுள் தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்துவது எப்படி? பயனர்கள் labs.google.com/search என்ற லிங்கை பயன்படுத்தி SGE ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். அதை செய்தால் பயனர்கள் கூகுள் தேடுபொறியில் தேடுதலை மேற்கொள்ளும் போது அதற்கான ஏஐ வியூவையும் பார்க்க முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.