கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, பாரத ராஷ்டிர சமிதியும், பா.ஜ.க-வும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதற்கிடையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021-ல், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர்.
கட்சி தொடங்கிய நாள்முதல், முதல்வர் சந்திரசேகர ராவையும், அவரின் கட்சியையும் கடுமையாக எதிர்த்து வந்தார். இவ்வாறான சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒய்.எஸ்.ஷர்மிளா தனது கட்சியோடு, காங்கிரஸுடன் இணையப்போவதாக செய்திகள் உலா வந்தன. அதற்கேற்றாற் போலவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலங்கானாவிலிருந்து சந்திரசேகர ராவ், ஒவைசி ஆகியோர் பா.ஜ.க, காங்கிரஸ் என இரு கூட்டணியை எதிர்த்தபோதும் கூட, ஷர்மிளா இன்னும் இதில் எந்தவொரு கருதும் வெளிப்படுத்தாமல் மௌனம் காத்து வந்தார்.
அதோடு, காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, ஷர்மிளா சந்திக்கப்போவதாக செய்திகள் வெளியானதையடுத்து, விரைவில் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. இப்படியிருக்க, எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், ஷர்மிளா டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, “சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் இன்று சந்தித்தேன். மிகவும் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். ஒன்றை மட்டும் உங்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பிஆர்எஸ் அரசின் தோல்விக்கான கவுன்டவுன் (countdown) தொடங்கிவிட்டது” என்று கூறினார்.
கட்சி இணைப்பு குறித்து ஷர்மிளா எதையும் பேசவில்லை என்றாலும் கூட, அவரின் தந்தையும், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பாக முதல்வராகப் பதவி வகித்தவருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைந்த தினமான செப்டம்பர் 2-ம் தேதி அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.