மூணாறு:கேரளாவில் தென்மேற்கு பருவ மழை குறைவால் கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோக மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8ல் துவங்கியது. மாநிலத்தில் நேற்று வரை கடந்த மூன்று மாதங்களில் 48 சதவீதம் மழை குறைவு. ஜூன் முதல் ஆக.31 வரை சராசரி 1735.2 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்தாண்டு அதே கால அளவில் 909.5 மி.மீ., பதிவானது. இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, கோட்டயம், திருச்சூர் ஆகிய ஆறு மாட்டங்களில் மழை சராசரி அளவில் 50 சதவீதம் குறைவாகும்.
பருவமழை குறைவால் மாநிலம் முழுவதும் அணைகள், ஆறுகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இன்றி போனால் 2016 போல கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோகம் மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஆறு மாவட்டங்களில் அதிதீவிரமாகவும், எட்டு மாவட்டங்களில் கடுமையாகவும் வறட்சி நிலவும் என கூறப்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசு, தனி நபர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.
மாநிலத்தில் மற்ற மாவட்டங்களை விட இடுக்கியில் இந்தாண்டு 37 சதவீதம் மட்டும் மழை பெய்துள்ளதால் அதிதீவிர வறட்சிக்கு வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டுவதாக மையம் நிர்வாக இயக்குனர் மனோஜ் பி. சாமுவேல் தெரிவித்தார்.
மாநிலத்தில் ஆக.28 வரை மழை இன்றி காணப்பட்ட நிலையில் ஓணம் பண்டிகையான ஆக.29 முதல் மழை பெய்து வருகிறது. 34 நாட்களுக்கு பிறகு சராசரி மழை 10 மி.மீ., மேல் பதிவானது. இம்மாதம் இறுதிவரை பருவமழைக்கான காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement