முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவை பயன்படுத்தி வந்தார்.
அதிமுக ஆட்சி நடந்த 2017ஆம் ஆண்டில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். கொடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
ஆட்சிக்கு வந்த பின் கொடநாடு வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. கொடநாடு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே கொடநாடு சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த கனகராஜின் சகோதரர், கொடநாடு கொலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று கூறி அதிரவைத்தார்.
இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “கொடநாடு என்று சொன்னாலே ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுகிறது, எதற்காக பதற்றப்படுகிறார், தனபாலின் பேட்டியை பார்த்ததும் ஏன் இபிஎஸ் பிபி எகிறுகிறது” என்றெல்லாம் விமர்சித்து இன்று தலையங்கம் எழுதியது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர்
சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொடநாடு விவகாரம் குறித்து பேசிய பழனிசாமி, “ஒரு முதல்வர் ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். திமுக ஆட்சியில் இருந்தபோது பலரும் இறந்தார்கள்.
அதையெல்லாம் நாங்கள் திரும்பி தோண்டமாட்டோமா? அதிமுக ஆட்சி நடந்தபோது நடைபெற்ற பல சம்பவங்களில் இதுவும் ஒன்று. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இதனை மையமாக வைத்து ஏன் பேசுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
கோடநாடு விவகாரத்தில் எடப்பாடியை ஸ்டாலின் காப்பாற்றுவது ஏன்? – புகழேந்தி கேள்வி
வேண்டுமென்றே திட்டமிட்டு எனக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய இபிஎஸ், கொடநாடு சம்பவம் நடந்தபோது குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். ஆனால், வழக்கு நடைபெறும் போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானது திமுக வழக்கறிஞர்கள் தான்.
நான் அரசை பார்த்து கேட்கிறேன், இந்த விவகாரத்த சிபிஐ ஏன் விசாரிக்கக் கூடாது? நீங்கள்தான் சந்தேகம் இருக்கிறது என்று சொல்கிறீர்களே… அப்படியென்றால் கொடநாடு வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள் என்றும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
மேலும், “ எங்கள் மீது எந்த குற்றமும் இல்லாத காரணத்தால் அடிக்கடி இப்படி சொல்லி வருகிறார்கள். கொடநாடு விவகாரத்தில் நான் பதறவில்லை. பலமுறை இதுகுறித்து பதிலளித்துவிட்டேன். குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஏன் ஜாமீன் தாரராக இருந்தார்கள்.
அதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மை வெளிவந்துவிடும் என்பதால் திமுக கொடநாடு வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுக்கிறது” என்று பேட்டியளித்தார் எடப்பாடி பழனிசாமி.