உலக கிரிக்கெட்டில் கோலோச்சும் அணிகளில் இந்திய அணி ஒன்று. இந்த அணியில் இடம்பிடிப்பது என்பதெல்லாம் குதிரை கொம்பு கணக்கு தான். பிளேயிங் லெவனில் இல்லை, 14 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றாலும் யோயோ என்ற உடல் தகுதி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். அந்த டெஸ்டில் பாஸாக கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்களை பெறும் வீரர்களே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் கிரிக்கெட்டில் ஸ்டார் பிளேயர்களாக இருந்தும் யோயோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் முக்கியமான தொடர்களில் விளையாட முடியாமல்போன 4 இந்திய வீரர்களை பற்றி பார்க்கலாம்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் யோ-யோ டெஸ்டில் பங்கேற்றார். அந்த டெஸ்டில் அவர் தோல்வியடைந்து இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மீண்டும் இந்திய ஏ அணியிலேயே விளையாடிக் கொண்டிருந்தார். அவருடைய இடத்துக்கு இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.
யுவராஜ் சிங்
ஒரு முறை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பிடிஐ வெளியிட்ட செய்தியில் யுவராஜ் சிங் யோயோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றாலும் திரும்ப இந்திய அணிக்கு அழைக்கப்படவில்லை.
அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு ஐபிஎல் 2018-ல் மிக சிறப்பாக விளையாடினார். இதனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு முன் இப்படி நடந்ததால் இந்திய ஏ அணிக்கு செல்லும் சூழல் உருவானது.
முகமது ஷமி
ஐபிஎல் 2018க்குப் பிறகு யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்த மூன்று வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர். வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பு டெஸ்டில் தோல்வியடைந்தார். இவருக்கு பதிலாக அப்போது இந்திய அணியில் நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டார்.