கோண்டா: ‘‘சரணடைய வந்துள்ளேன், என்னை சுட்டு விட வேண்டாம்’’ என்ற பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உத்தர பிரதேச காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.
உத்தர பிரதேசம் கோண்டா பகுதியைச் சேர்ந்த அமர்ஜித் சவுகான் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது, பிப்ராகி பாலம் அருகேஇரண்டு பேர் துப்பாக்கி முனையில்வழிமறித்து, தனது இருசக்கர வாகனம், செல்போன், மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார்.
இந்த கொள்ளை வழக்கில் அங்கித் வர்மா என்பவர் உட்பட 2 பேரை போலீஸார் தேடி வந்தனர். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20,000 வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. அறிவித்திருந்தார்.
தலைமறைவு: கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அங்கித் வர்மாவுக்கு, போலீஸார் தன்னை என்கவுன்டரில் சுட்டுவிடுவர் என்ற பயம் ஏற்பட்டது. இதனால் கோண்டா பகுதியில் சாபியா காவல் நிலையத்துக்கு அங்கித் வர்மா நேற்று சென்றார்.அவரது கழுத்தில் ‘‘நான் சரணடைய வந்துள்ளேன். என்னை சுட்டுவிட வேண்டாம்’’ என எழுதப்பட்ட பதாகை இருந்தது. போலீஸாரிடமும், ‘‘நான் சரணடைய வந்துள்ளேன், சுட்டுவிடாதீர்கள்’’ என கெஞ்சியுள்ளார். அவரை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.
இது குறித்து வட்டார அதிகாரி நவீன சுக்லா கூறுகையில், ‘‘முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், போலீஸை கண்டு குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சரணடைகின்றனர்’’ என்றார். ‘‘முதல்வர் யோகி ஆதித்யநாத் கோண்டா வருவதற்கு முன்பாக,அங்கித் வர்மா சரணடைந்துள்ளது மிகப் பெரிய சாதனை’’ என போலீஸாரும் தெரிவித்தனர்.