வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”உச்ச நீதிமன்ற இணையதளம் போலவே போலி இணையதளம் துவங்கி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,” என, தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்து உள்ளார்.
இது குறித்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போலவே போலியான இணையதளம் துவங்கி, அதன் வாயிலாக மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருவது குறித்து கேள்விப்பட்டோம்.இணையதளம் வாயிலாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி தொடர்பான தகவல்களை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் கேட்காது. அது போன்ற தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம்.உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், www.sci.gov.in என்பது தான். எனவே, வேறு இணையதள லிங்குகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
ஒருவேளை இந்த போலி இணையதள கும்பலால் நீங்கள் ஏமாந்து இருந்தால், உடனடியாக உங்கள், ‘ஆன்லைன்’ வங்கி பரிமாற்றத்துக்கான கடவுச்சொற்களை மாற்றவும். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளோரை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.”வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் போலி இணையதளத்தில் பணத்தை பறிகொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,” என, தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement