ஜெயிலர், ஜவான் – நெல்சன், அட்லீக்கு ஆலோசனை சொன்ன விஜய்
இளம் இயக்குனர்கள் டாப் சீனியர் நடிகர்களை இயக்க வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு சாதனையை இரண்டு இளம் தமிழ் இயக்குனர்கள் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் மூலம் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார் அப்படத்தை இயக்கிய நெல்சன். அதற்கு முன்பு அவர் விஜய் நடிக்க இயக்கிய 'பீஸ்ட்' படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனால், ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு தர வேண்டாம் என ரஜினியிடமே சில வினியோகஸ்தர்கள் சொன்னார்கள். ஆனால், அதையும் மீறி வாய்ப்பு தந்து சாதனை வெற்றியை பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். 'ஜெயிலர்' படத்தை நெல்சன் இயக்கக் காரணமானவர் விஜய் என ஒரு பேட்டியில் நெல்சன் தெரிவித்திருந்தார்.
அடுத்து அதே போன்றதொரு விஷயத்தை அட்லீ தெரிவித்துள்ளார். ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள 'ஜவான்' ஹிந்திப் படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, 'ஜவான்' படம் உருவாக விஜய்யும் ஒரு காரணம் என்றார். விஜய், அட்லீ கூட்டணியில் வந்த 'தெறி, மெர்சல், பிகில்' ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்.
தன்னை வைத்து படங்களை இயக்கிய இயக்குனர்களான நெல்சன், அட்லீ ஆகிய இருவரும் அடுத்த கட்டத்திற்கச் செல்ல வேண்டுமென அவர்களுக்கு சரியான ஆலோசனை ஒன்றை விஜய் வழங்கியுள்ளார். நெல்சன் 'ஜெயிலர்' மூலம் சாதித்துவிட்டார். அடுத்து 'ஜவான்' மூலம் அட்லீயும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.