ஜோஹன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் பரிதாபமாக பலியாகினர்; 52 பேர் காயமடைந்தனர்.
தென் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நகரான ஜோஹன்னஸ்பர்கின் ஆல்பர்ட்ஸ் சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில், புலம்பெயந்தவர்கள் தங்கியிருந்தனர்.
குழந்தைகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்த இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 73 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 52 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெரிசலாக கட்டப்பட்டிருந்த இந்த கட்டடத்தில் காற்று போகக் கூட வழியில்லாத நிலையில், நெருப்பில் சிக்கியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக, உயிர் தப்பியவர்கள் கூறினர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், ஆடைத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாகினர். க்யூசான் நகரத்தை ஒட்டிய தண்டாங் சோரா கிராமத்தில் செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால், தொழிற்சாலையில் பணி முடித்து துாங்கிக் கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தீயில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த தொழிலாளர்கள் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலையில் தீ விபத்து
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement