நெல்லை பாஜக பிரமுகர் கொலை: அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை: “குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது என்பதை திமுகவினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக பாஜகவின், திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், ஜெகன் பாண்டியன், சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

ஜெகன் பாண்டியனின் அயராத மக்கள் பணியையும், அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பெற்றுவரும் நன்மதிப்பையும் தாங்க முடியாத சமூக விரோதிகள், இந்த பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கு நெருக்கமான மூளிகுளம் பிரபு என்ற திமுக நபரின் பெயர் காவல் துறையின் முதல் தகவலறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்.

குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது என்பதை திமுகவினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது.

காவல் துறை, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினர் மிரட்டல்களுக்குப் பயந்து, குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சி நடக்குமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாஜக சும்மா இருக்காது என்றும் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன். இவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து ஜெகன் பாண்டியனை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.