புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார். இதில் பல குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பிருந்தாவன் விதவைகள் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிரதமரின் கையில் குழந்தைகள் ராக்கி கட்டினர். மோடியுடன் கலந்துரையாடிய குழந்தைகள் பாடல்களை பாடினர். மக்களுக்கு பயனளிக்கும் அரசு திட்டங்கள் உட்பட பல தலைப்புகளில் பாடல் எழுதுவது பற்றி ஆராய வேண்டும் என பள்ளிக் குழந்தைகளை அவர் ஊக்குவித்தார்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு, எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான சிதைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அளவற்ற அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை, நமது கலாச்சாரத்தின் புனிதமான பிரதிபலிப்பாகும். இந்த விழா அனைவரின் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வை ஆழப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.