பூஜ்: பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்கள், கட்ச் பகுதி வரைபடங்களுடன் குஜராத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கட்ச் மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரது பையில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கிராமங்களின் வரைபடங்கள், பல்வேறு கருவிகள், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன.
விசாரணையில் அவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அவரிடம் மாநில போலீஸார், மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலுள்ள ரபார் தாலுகா லோட்ரானி கிராமம் அருகே குடா சோதனைச் சாவடி பகுதி அருகே தினேஷ் வந்தபோது மாநில உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கட்ச் மாவட்ட போலீஸ் எஸ்.பி. (கிழக்கு) சாகர் பக்மார் கூறியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று சுற்றித் திரிந்த நிலையில் அவரை பிடித்து தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். அவர் எதற்காக கட்ச் பகுதிக்கு வந்தார் என்பதை அவர் இதுவரை கூறவில்லை. அவரிடம் மாநில போலீஸாரும், மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் தரும் பதில்கள் திருப்தி தராததால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதுகுறித்து மாநில போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
லோட்ரானி கிராமமானது இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது. சர்வதேச எல்லைப் பகுதி என்பதால் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம் இங்கு அமைந்துள்ளது.
இந்த இடத்தில் மாநில உளவுத்துறை அதிகாரிகள், ரோந்து சுற்றி வந்தபோது தினேஷைப் பார்த்து விசாரித்துள்ளனர். அவர் திருப்திகரமான வகையில் பதில் அளிக்காததால் அங்குள்ள பலசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரது பையில் கட்ச் பகுதி எல்லை, எல்லையில் உள்ள பாகிஸ்தான் கிராமங்களின் (நகர் பர்க்கர், இஸ்லாம்கோட்) வரைபடங்கள் (கையால் வரையப்பட்டவை), ஸ்கூரு டிரைவர், ஸ்பானர், கட்டிங் பிளையர், கத்தரிக்கோல், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவை இருந்தன.
மேலும் அவரது பையில் உணவு, மும்பையில் இருந்து சுரேந்திரன் நகருக்கு வந்த ரயில் டிக்கெட், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.