"பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா".. கூட்டணி வச்சா என்ன தப்பு.. ஆவேசமான எடப்பாடி பழனிசாமி

மதுரை:
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்வியால் சூடான அதிமுக பொதுச் செயலாளர்

, “பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?” என பதில் கேள்வியெழுப்பினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழலில் டெல்லி மேலிட நிர்பந்தத்தால் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. இப்போது வரை அந்தக் கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக கூறினார். மேலும், அதிமுகவின் ஊழல்களை வெளியிடுவேன் எனவும் அறிவித்தார்.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் உருவானது. இரு தரப்பு மூத்த தலைவர்களும் ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டனர். “விருப்பம் இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு போக வேண்டியதுதானே” என அதிமுகவும், “நீங்கள் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்” என பாஜகவும் பரஸ்பரம் பேசிய சம்பவங்களும் அரங்கேறின. இத்தனை நடந்த போதிலும், “ஒன்னுமில்லையே” என தட்டிவிட்டு விட்டு இரு கட்சிகளும் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மதுரைக்கு இன்று வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், “அதிமுகவில் ஒற்றை தலைமையாக மாறிவிட்டீர்கள். இப்போதாவது அரசியல் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா?” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இது உங்களுடைய விருப்பமாக இருக்கலாம். நாங்கள் மிகப்பெரிய கட்சி. 2 கோடி பேர் இருக்கும் கட்சி. எங்களுக்குனு ஒரு விருப்பம் இருக்கும். ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாதா? பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? 1999-ல் இதே பாஜகவோட திமுக கூட்டணி வெச்சாங்களா இல்லையா? வெற்றி பெற்றார்களா இல்லையா? மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார்களா இல்லையா? சுய நினைவே இல்லாமல் ஒரு வருடமாக இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் இருந்தாரே. அப்போதெல்லாம் உங்களுக்கு பாஜக இனிச்சிச்சு. இப்போ கசக்குதா?

இது அரசியல் சார். அரசியல் சூழலுக்கு ஏற்ற மாதிரிதான் கூட்டணி வைக்க முடியும். கூட்டணி வேறு; கொள்கை வேறு. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அவங்களோட கொள்கையை நாங்க ஏற்றுக்கொண்டோம் என அர்த்தம் கிடையாது” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.