புதுடில்லி, மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த 19 குற்றங்கள் உட்பட 27 வழக்கு களின் முதல் தகவல் அறிக்கைகளை, மாநில போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் சமூகத்தினரிடையே மே 3ல் மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
இதற்கு அடுத்த நாள், கூகி பிரிவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல், ஜூன் 4ல், 7 வயது சிறுவன், அவனுடைய தாய் மற்றும் உறவினர் குண்டு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, வழிமறித்த 2,000 பேர் கும்பல், மூன்று பேரையும் ஆம்புலன்சில் வைத்து உயிருடன் எரித்தது.
இந்த சம்பவமும் நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பியது.
கடந்த மூன்று மாதங்களாக நீடித்த கலவரத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து, மணிப்பூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், இவை தொடர்பான விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்காக நியமிக்கப்பட்ட 29 பெண் அதிகாரிகள் உட்பட 53 பேர் அடங்கிய குழு, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிராக நடந்த 19 குற்றங்கள் உட்பட 27 வழக்குகளின் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை, மணிப்பூர் போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.ஐ., அதிகாரிகள், புதிதாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்