மூன்று மாதங்களுக்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 8 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 21 உயிர்களை பலிகொண்ட கள்ளச்சாரய சம்பவம், தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அது, மெத்தனால் என்ற கெமிக்கல் கலக்கப்பட்ட விஷச்சாராயம் என்பது ஆய்வில் தெரியவந்திருந்தது. அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு மாவட்டங்களிலும் எஸ்.பி-கள் முதல் ஏட்டுகள் வரை பணி மாறுதல்கள், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம் முழுவதும் சாராய வியாபாரிகள்மீதான கைது நடவடிக்கைகளும் வேகமெடுத்திருந்தன. இந்த தாக்கத்தால் ஓரிரு மாதங்கள் சாராய விற்பனை சற்று குறைந்திருந்த நிலையில், அண்மை நாள்களாக மரக்காணம் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான், மரக்காணம் அருகேயுள்ள கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி லோகநாதன் என்பவர் வீட்டில், கள்ளச்சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மரக்காணம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, கடந்த 27-ம் தேதி இரவு மரக்காணம் காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார், லோகநாதனின் கரிப்பாளையம் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 250 சாராய பாக்கெட்டுகள், பேக் செய்ய பயன்படுத்தும் மெஷின், 15 லிட்டர் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, லோகநாதனின் மகன் ஞானவேல் என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனர். அந்த தகவலின்படி, 30 லிட்டர் கொள்ளளவிலான 14 கேன்களில் மற்றொரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த 420 லிட்டர் கள்ளச்சாராயத்தை மறுதினம் போலிஸார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாராயத்தைப் பதுக்கி வைத்த லோகநாதனின் மகன் ஞானவேலைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த ஞானவேலுவின் குடும்பத்தினர்மீது ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இவர்களுடைய கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடைசெய்யும் விதமாக லோகநாதனின் இரு வீடுகளுக்கும் சீல் வைத்திருக்கும் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்… அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்ற சாராய வியாபாரிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மரக்காணம், கரிப்பாளையம் பகுதிகளிலுள்ள லோகநாதனின் இரு வீடுகளுக்கும் கடந்த 29-ம் தேதி சென்ற மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், மரக்காணம் தெற்கு பகுதி வி.ஏ.ஓ மற்றும் மரக்காணம் காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான காவல் அதிகாரிகள், அந்த இரு வீடுகளை மூடி அதிரடியாக சீல் வைத்தனர்.

இந்த நடவடிக்கை, மரக்காணம் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, மற்ற சாராய வியாபாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY