மதுரை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே விற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சேர்ந்த அரசுபாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”விநாயகர் சதுர்த்தியை இந்துக்கள் பெரியளவில் கொண்டாடுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு ரசாயன பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.
ரசாயன பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைவதில்லை. இந்த சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை கடல், ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்க தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றியே விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்து விற்க வேண்டும், நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டது.