வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அடிப்படை உள்கட்டமைப்பை ரஷ்யா தரைமட்டமாக்கியது. இந்தத் தாக்குதலில் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனில்1000 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்துகிறது. எனினும், ரஷ்யாவை எதிர் கொள்ளும் வகையில் உக்ரைனிடம் ராணுவக் கட்டமைப்பு இல்லை. இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுகின்றன.
உக்ரைனுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரையில் 43 பில்லியன் டாலருக்கு (ரூ.3.5 லட்சம் கோடி) ஆயுதங்கள் வழங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்க பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏஐஎம் – 9 எம் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அமெரிக்காவின் ஆயுத இருப்பிலிருந்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.