பீஜிங், ‘எங்கள் நாட்டு சட்டத்துக்கு இணங்க வழக்கமான நடைமுறையை பின்பற்றி வரைபடம் வெளியிட்டு உள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பதுடன், மிகை விளக்கம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, சீனா அடாவடியாக தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடு
நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான தன் தேசிய வரைபடத்தை சமீபத்தில் சீனா வெளியிட்டது.
இதில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் இடம்பெற்றுள்ளது.
மேலும், 1962 போரின்போது சீனா ஆக்கிரமித்த அகாசி சின் பகுதியும் இடம்பெற்று உள்ளது.
இதில், அருணாச்சல பிரதேசத்தை, தெற்கு திபெத் என சீனா கூறி வருகிறது. ஆனால், இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த வரைபடத்தில், தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதியாக சீனா குறிப்பிட்டு உள்ளது. மேலும், தென் சீனக் கடல் பகுதி முழுதும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நடைமுறை
இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. ”அபத்தமான முறையில் உரிமை கோருவதன் வாயிலாக, மற்றவர்களின் பிரதேசங்களை உங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முடியாது,” என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இது குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று கூறியதாவது:
சீன தேசிய வரைபடத்தின் 2023ம் ஆண்டுக்கான பதிப்பை, சீன தேசிய வளத்துறை அமைச்சகம் கடந்த 23ம் தேதி வெளியிட்டது. சீனாவின் இறையாண்மையை, சட்டப்படி செயல்படுத்தும் வழக்கமான நடைமுறை தான் இது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அமைதி காப்பர் என நம்புகிறேன். தேவையின்றி மிகை விளக்கங்களை அளிப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்