விநாயகர் அகவல்: மூலமும் விளக்கமும்! நினைத்ததை நடத்தி வைக்கும் அதிசயப் பாடல்!

ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் – ஔவையார் அருளியது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

விநாயகர்!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

அரசமரத்தடி விநாயகர்

இடைபிங் கலையின் எழுத்தறி வித்து

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

விநாயகர்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

விநாயகர் அகவல் ஏன் உருவானது!

ஈசன் அளித்த வெள்ளை யானையின் மீதேறி சுந்தரமூர்த்தி நாயனாரும், வெள்ளைக் குதிரை மீதேறி சேரமான்பெருமான் நாயனாரும் தங்கள் பிறவியை முடித்துக் கொண்டு வான்வழியே திருக்கயிலைக்குச் சென்றார்கள். அப்போது திருக்கோவலூரில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் கணபதியை பூஜித்துக் கொண்டிருந்தார் ஒளவையார். இருவரும் கயிலைக்குச் செல்வதைக் கண்ட ஒளவையாருக்கும் திருக்கயிலைக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. கயிலைக்குச் செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரார்த்தனையாக்கி, விநாயகருக்குத் துதிப்பாடல் ஒன்றையும் சமர்ப்பித்தார். அதுவே விநாயகர் அகவல். இந்தப் பாடலை அவர் பாடி முடித்ததும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஒளவையின் பூஜையாலும் பாடலாலும் மகிழ்ந்த விநாயகர், தன் துதிக்கையால் அவரைத் தூக்கி, ஒரே க்ஷணத்தில் கயிலையில் சேர்த்தார். அதன் பிறகே சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். இருவரும் ‘இது எப்படி சாத்தியம்’ என்று வினவ, அதற்கு ஔவையார்

‘மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை

முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி

அதிரநடந்தும் யானையும் தேரும் அதன் பின்வருங்

குதிரையுங் காதங் கிழவியும் காதங்குல மன்னரே!’

என்றாராம். அதாவது, `மதுர மொழி கொண்ட உமையின் புதல்வனான விநாயகரைத் துதித்ததால், அவரருளாலேயே யானைக்கும், குதிரைக்கும் முன்பாகவே என்னால் கயிலையை வந்தடைய முடிந்தது’ என்றார். ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

விநாயகர்

பாடலின் எளிய விளக்கம்:

அகவல் என்றால் அழைத்தல் என்று பொருள். விநாயகர் அகவல் என்னும் இப்பாடல், விநாயகப் பெருமானின் அருள்வேண்டி அழைத்துப் போற்றித் துதிக்க, ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டது. விநாயகப்பெருமானை பல்வேறாகத் துதித்து, அவரது பெருமைகளைப் போற்றி வியக்கும் இந்த பாடல், வெறும் ஸ்தோத்திரப் பாடலாக மட்டுமின்றி, ஞானத்தை விளக்கும் சாஸ்திரப் பாடலாகவும் இருப்பது சிறப்பு. அளவில்லாத ஆனந்தத்தை அளித்து, துன்பங்கள் அகற்றி, அருள் வழி காட்டி, உள்ளும், புறமும் ஈசனைக் காட்டி அருள்பவன் விநாயகன். அளவில்லாத ஞானத்தை உள்ளேயே காட்டி, உண்மையான தொண்டர்களுடன் நம்மைச் சேர்த்து, உண்மையான பொருளை நம் நெஞ்சிலே அறிவித்து, நம்மை ஆட்கொண்ட ஞான வடிவான விநாயகப் பெருமானே, பரிமள சுகந்தமான உமது பாதார விந்தங்களுக்கு சரணம் என்கிறது இந்த பாடல்.

இந்தப் பாடலின் பயன்:

விநாயகர் அகவலை அன்றாடம் பாராயணம் செய்துவந்தால் காரியத் தடைகள் அகலும். விருப்பங்கள் நிறைவேறும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆண்கள் தொழிலிலும் வேலையிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்கள் மங்கல வாழ்வு பெற்று நிறைவோடு வாழ்வார்கள். சுருங்கச் சொல்லின் எண்ணியவை யாவும் நிறைவேற்றும் புண்ணியப் பாடல் இது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.