பெங்களூரு:பெங்களூருக்கு ஆகஸ்ட் மாதம், மாறுபட்ட மாதமாக அமைந்துள்ளது. 1885க்கு பின், நடப்பு ஆகஸ்டில் 90 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே வெப்ப நிலை அதிகரித்து, கோடைக்காலமாக மாறியது.
பெங்களூரில் பொதுவாக, ஆகஸ்ட் மாதம் மிக அதிகமான மழை பெய்வது வழக்கம். இம்முறை ஆகஸ்ட் மாதத்தில், வித்தியாசமான சூழ்நிலை இருந்தது. வெப்பம் வாட்டி வதைக்கிறது. கோடைக்கால உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 1885க்கு பின், இந்த ஆகஸ்டில் வெப்பம் மிக அதிகமாக பதிவாகிறது.
இது குறித்து, வானிலை ஆய்வக வல்லுனர்கள் கூறியதாவது:பொதுவாக பெங்களூரில் ஆகஸ்டில், 163 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வானிலை மாற்றத்தால், வெறும் 12 மி.மீ., மழை பெய்தது. பெங்களூரில் 90 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சமீப நாட்களில், ஆகஸ்டை மிகவும் வறண்ட மாதம் என, கூறலாம். ஆகஸ்டில் சில நாட்களை தவிர, மற்ற நாட்களில் தென் மேற்கு பருவமழை, கொட்டி தீர்க்கும். ஆனால் இம்முறை வெப்ப நிலை விபரீத அளவில் பதிவாகிறது. கோடைக்காலமாக மாறியுள்ளது.
கடந்த 1899ன் ஆகஸ்ட் 6ல், பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்ஷியஷின் பதிவாகியிருந்தது. அதன்பின் நடப்பு ஆகஸ்ட் 28ல், 32.6 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மழை குறைந்ததால், வெப்பநிலை ஏறுமுகமாகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement