வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 200 ரூபாயைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ’சமையல் எரிவாயு விலை குறைப்பு ரக்சா பந்தன், ஓணம் பண்டிகை ஆகியவற்றையொட்டி பிரதமர் மோடியின் பரிசு’ என்று குறிப்பிட்டார்
மேலும், ‘உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 ஏழை லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலமாக, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும்’ என்று அனுராக் தாக்கூர் கூறினார்.
2014-ம் ஆண்டு மோடி பிரதமர் பதவியில் அமர்ந்தபோது, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. அது, படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போனது. கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட, சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தாண்டியபோது, மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 1,200 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது 200 ரூபாயை மத்திய அரசு குறைத்திருக்கிறது.
ஒவ்வொரு தடவை விலை அதிகரிக்கும்போது, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புவது உண்டு. எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்துவதும் வழக்கம். அப்போதெல்லாம் எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு, தற்போது விலையை திடீரென்று குறைத்திருப்பதற்கு தேர்தல்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வைக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதசம் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு, சிலிண்டர் விலை உயர்வு விவகாரம் பெரிதாகியிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும், ராஜஸ்தானில் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க தீவிரமாக வேலை செய்கிறது. இந்த நேரத்தில், சிலிண்டர் விலை விவகாரம் பா.ஜ.க-வுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது.
ஏனெனில், ராஜஸ்தானில் ஆட்சியைத் தக்கவைத்தாலும், மத்தியப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தாலும், சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.500-க்கு வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி வழங்கியிருக்கிறது. இதன் பின்னணியில்தான், சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது. தேர்தலுக்காகத்தான் விலையைக் குறைத்திருக்கிறீர்களா என்று அனுராக் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இல்லை.. இது ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்காக பிரதமர் மோடி வழங்கிய பரிசு இது’ என்று அவர் சமாளித்தார்.
‘கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்கு ஏன் இந்தப் பரிசை பிரதமர் மோடி வழங்கவில்லை‘ என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பிரதமர் மோடியிடமிருந்து இன்னும் பல ‘பரிசு’கள் வரும் என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கின்றன.
சிலிண்டர் விலை உயர்வு விவகாரம், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக மாறியது. அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. எனவே, வரும் தேர்தல்களிலும் தங்களின் வெற்றிக்கு இந்தப் பிரச்னை தடையாக இருக்கும் என்று பா.ஜ.க அஞ்சியிருக்கலாம். அதனால், விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
“கர்நாடகாவில் பா.ஜ.க அடைந்த தோல்வியும், எதிர்க்கட்சியின் ‘இந்தியா’ கூட்டணியின் இரண்டு கூட்டங்களின் வெற்றியும்தான் சிலிண்டர் விலை குறைப்புக்கு முக்கியக் காரணம்” என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். “தோல்வி பயத்தில் இருக்கும் பா.ஜ.க., தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யும் மனநிலையில் இருக்கிறது” என்றும் அவர் சாடியிருக்கிறார். அடுத்து `தீபாவளி பரிசு காத்திருக்கிறது’ எனவும் பாஜகவை விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.!