தமிழ்நாட்டில், மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின்கீழ் சில்லறை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகின. மேலும், டாஸ்மாக் பார்களுக்கு அரசு முறையாக டெண்டர் விடாததால், லைசென்ஸ் இல்லாத பார்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வந்தன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதோடு, பார்கள் மூலம் முறைகேடுகளும் அரங்கேறின.
டாஸ்மாக் தொடர்பான சர்ச்சை தொடர்ந்த நிலையில், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறிப்பட்டு மூடப்படும்’ என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்றாதால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, 500 கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, ‘ அருகருகே உள்ள கடைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகள், நீதிமன்ற உத்தரவு உள்ளவை, நீண்ட நாளாக பொதுமக்கள், கட்டட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் கடைகள் என 500 கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சர்ச்சைக்குரிய கடைகளை மூடாமல், குறைவாக விற்பனையாகும் கடைகள், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய பார் உரிமையாளர்களின் பார் இருக்கும் கடைகள் என தேடித்தேடி மூடியதாக சர்ச்சை வெடித்தது.
மேலும், மதுக்கடைகளில் 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதை நிறுத்த உத்தரவும் வெளியிடப்பட்டது. ஆனால், அது இன்றும் தொடர் கதையாகவே இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக டெண்டர் விடமால் முறைகேடாக நடக்கும் பார்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது அரசு. ஆனால், சீல் வைக்கப்பட்ட கடைகளில் இன்றும் ஜோராக விற்பனை நடக்கிறது. இதுகுறித்து ஜூ.வி-யில் விரிவாக கட்டுரையும் எழுதப்பட்டு இருக்கிறது. அதேபோல, காலையில் கடைத்திறப்பு, கட்டிங் திட்டமென புதிதாக வந்த அமைச்சரும் சர்ச்சைகளை பற்றவைத்தார். இந்நிலையில்தான், டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, நேரம் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொது செயலர் தனசேகரனிடம் பேசினோம். “டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்கவேண்டுமென்று நீண்ட நாள்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்படும்போது, கணக்குகளை முடிக்க 11.30-க்கும் மேல் ஆகிறது. இதனால், விற்பனையான பணத்தை கையில் எடுத்துச் செல்லப்படும்போது டாஸ்மாக் ஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவது தொடர் கதையாக நடக்கிறது. இதனால்தான், இரவு 8 மணிக்கு கடைகளை மூட அரசு உத்தரவு பிறபிக்கவேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கிறோம். தற்போது நீதிமன்றத்தின் வழக்கு காரணமாக கடைகளை அடைக்க டாஸ்மாக நிறுவனம் பேச்சுவார்த்தை செய்வதாக கூறப்படுகிறது. அது உண்மை எனில், 12 – 8 என இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, “புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க அரசுக்கு பெறும் தலைவலியாக இருந்தது டாஸ்மாக்தான். எதையெடுத்தாலும் சர்ச்சைதான். இதனால் ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதென தலைமை நினைத்தது. இதனால், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரிடம் துறையில் சில மாறுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படிதான், லைசென்ஸ் இல்லாத பார்கள் சீல் வைக்கப்பட்டன.
500 கடைகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்துதான், தற்போது நேரம் குறைப்பு குறித்து துறையின் உயர் அதிகாரிகள் அமைச்சருடன் ஆலோசனை செய்து வருகின்றனர். நீதிமன்ற வழக்கும் நேரம் குறைப்பு குறித்து விசாரித்து வருகிறது. அதன்படி, காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் கடைகளை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என இயக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ஏன்னென்றால், இரவு 8 முதல் 10 மணி வரைதான் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தை குறைத்தால், வருவாய் இழப்பு ஏற்படும். எனவேதான், கடை திறப்பை தள்ளிவைக்க ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவிலேயே வெளியாக வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.