தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு 16 வயதில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. தீம் மியூசிக் என்றாலும் சரி, காதல் தோல்வி பாடல்களானாலும் சரி ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது யுவனின் பாடல்கள்தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்தவர்.
தங்கள் வலிகளை மறக்கடிக்கச் செய்யும் டாக்டர் என யுவன் சங்கர் ராஜாவை ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. 80’ஸ், 90ஸ்,2k கிட்ஸ் எனப் பல தலைமுறையினரும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களாக இருப்பது யுவனின் தனிச்சிறப்பு. அந்த வகையில் தற்போது கூட காதல் வளர்தேன், நினைத்து நினைத்து, கண்பேசும் வார்த்தைகள் போன்ற யுவனின் பல பாடல்களைக் குறிப்பிட்டு Dr. யுவனின் prescription என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடாடும் யுவனிற்கு அனிரூத், ஆர்யா, செல்வராகவன், விஷ்ணு வர்தன் போன்ற பல திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் வெட்கட் பிரபுவும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப்பதிவில் , “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, இந்த வருடம் ‘தளபதி 68’ படத்தில் நீ சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்” என்று குறிபிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.